கட்சிகளின் இலவச அறிவிப்பு: முடிவு கட்டினால் மகிழ்ச்சியே!

Added : அக் 12, 2022 | |
Advertisement
லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கும் போதெல்லாம், பொதுமக்களை கவர இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள் வழங்குவதை, அரசியல் கட்சிகள் வாடிக்கையாக வைத்துள்ளன. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, அரசு கஜானாவில் போதிய நிதி இருக்குமா, இல்லையா என்பது பற்றி கவலைப்படுவதில்லை.இதனால், 'அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கும் போதெல்லாம், பொதுமக்களை கவர இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள் வழங்குவதை, அரசியல் கட்சிகள் வாடிக்கையாக வைத்துள்ளன. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, அரசு கஜானாவில் போதிய நிதி இருக்குமா, இல்லையா என்பது பற்றி கவலைப்படுவதில்லை.

இதனால், 'அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, 'இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தரக்கூடாது என, அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது.

அதே சமயம் இலவசங்கள் என்றால், எது என்று வரையறுக்க வேண்டும். கல்வியை இலவசமாக வழங்குவது இலவச திட்டமா அல்லது அடிப்படை உரிமையா என்று பார்க்க வேண்டும்' என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைத்துக் கொண்ட தி.மு.க., 'இலவசங்கள் காரணமாக, மக்களின் அடிப்படை பொருளாதாரம் உயரும்; அதற்கான சான்றுகள் உள்ளன. மக்களை வறுமையில் இருந்து மீட்டு எடுக்க, இலவசங்கள் உதவியாக இருக்கும்' என்று வாதிட்டது.

அதே நேரத்தில், தேர்தல் ஆணையமோ, 'தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், அதற்கு தேவையான நிதி ஆதாரங்களை எப்படி திரட்ட போகிறீர்கள் என்பது குறித்தும், அரசியல் கட்சிகளிடம் கேள்விகள் கேட்க வேண்டும் என்றால், தேர்தல் நன்னடத்தை விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். நம் நாட்டில் அடிக்கடி தேர்தல் நடப்பதால், அரசியல் கட்சிகள் போட்டி போட்டு, மக்களுக்கு வாக்குறுதி களை வாரி வழங்குகின்றன. அதனால், மாநிலத் தின் நிதி நிலைமை எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை உணர்வதில்லை' என்று கூறியது.

'அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தவிர்க்க வேண்டும்' என, பிரதமர் மோடியும் அடிக்கடி கூறி வருகிறார். இருந்தும், எந்தக் கட்சியும் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. பஞ்சாப் சட்டசபை தேர்தலின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் ஒன்றுக்கு, 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. பஞ்சாப் மாநிலத்தில் அக்கட்சி ஆட்சியையும் பிடித்துள்ளது.

அதேபோல, 2021ல் தமிழகத்தில், பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். மாநகர, நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என, தி.மு.க., அறிவித்தது. அந்த அறிவிப்புக்கு பலன் கிடைத்தது; தி.மு.க., ஆட்சியையும் பிடித்தது. ஆனாலும், 1,000 உரிமைத் தொகை வாக்குறுதி, மாநிலத்தின் நிதி நிலைமை காரணமாக நிறைவேற்றப்படவில்லை.

'மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்களுக்கான செலவானது, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அல்லது வரி வசூலில், 1 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், சில மாநிலங்களில் இலவசங்களுக்கான செலவானது, 2 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது; அது சரியல்ல' என, பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், 'தேர்தல் நேரத்தில், மக்களுக்கான வாக்குறுதிகள், இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள், அதற்கான நிதி ஆதாரம், எப்படி திரட்டப்பட உள்ளது என்பது குறித்த உண்மை தகவலை, வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், தேர்தல் நன்னடத்தை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டால், அது நல்ல மாற்றமாகவே அமையும். அத்துடன், இலவசங்களால் ஏற்படும் நிதித் தாக்கங்கள் குறித்த ஆரோக்கியமான விவாதங்களும் உருவாகும்.

இலவசங்கள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் பின்பற்றும் அணுகுமுறை, நாட்டின், மாநிலங்களின் நிதி ஆரோக்கியத்திற்கு நீண்ட காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை. எனவே, இந்த விஷயத்தில் ஒரு தெளிவான தீர்வு காண முற்பட்டுள்ளது நல்ல முயற்சியே.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X