அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களின் சரக்கு கிடங்குகள், பல ஏக்கரில், மாடி உயர அலமாரிகளுடன் இயங்குபவை, இந்த அலமாரிகளில் சரக்குகளை எடுப்பது, வைப்பது, சேதாரத்தை சோதிப்பது போன்றவற்றை மனிதர்கள் செய்வது கடினம். எனவே தான், 'ரோபோ'க்களை பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால், அதிலும் சிக்கல்கள் இருக்கின்றன.
இதற்கு மாற்றாக, 'கேதர் ஏ.ஐ.,' குடோன் மேற்பார்வை 'ட்ரோன்'களை வடிவமைத்துஉள்ளது. அளவில் சிறிய கேதர் ட்ரோன்களால், தரை முதல் கூரை வரை அலமாரிகளை, கேமராக்கள் மூலம் கண்டு சோதிக்க முடியும். வேகமாக, எளிதாக பறக்க முடியும்.
பெட்டிகளின் மீதுள்ள பார்கோடுகளை 'ஸ்கேன்' செய்து, சரக்கு இருப்பை பதிவு செய்ய முடியும். அந்தரத்தில் அப்படியே நின்று பார்க்கவும், தேவைப்பட்டால் பெட்டிக்கு அருகே பறந்து சோதிக்கவும் அவற்றால் முடியும். மின் கம்பி இணைப்பு இல்லாததால், இண்டு இடுக்குகளுக்குள் ட்ரோன்களால் பறக்க முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கேதர் ஏ.ஐ., தனது சரக்கு குடோன் ட்ரோன்களுக்கு மூளையாக, இயந்திர கற்றல் மென்பொருள்களைக் கொடுத்துள்ளது.
இதனால் அவற்றால், தானாக தகவல்களை சேகரிக்கவும், முடிவெடுக்கவும் முடியும். இதனால் தான், சரக்கு குடோன்களில் பறக்கும் புத்திசாலி ட்ரோன்களை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.