வனப்பகுதிகளில் பல்லுயிர்த்தன்மை குறைந்து வருகிறது. இது மேலும் குறையாமல் இருக்க, காடுகளில் எழும் ஓசைகளை, மாதக் கணக்கில் பதிவு செய்து ஆராய்வது அவசியம் என்கின்றனர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
இதற்கென காட்டின் ஓசைகளை, மனித உதவி அதிகமின்றி பதிவு செய்ய எளிய கருவிகளை கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
அந்தக் கருவிகளை போர்னியோவின் வனப் பகுதிகளிலும், ஆர்க்டிக் பகுதியிலும் நிறுவியுள்ளனர். சில மாதங்கள் இந்தக் கருவிகள் யார் கண்ணிலும் படாமல் இயல்பாக பூச்சிகள், பறவைகள், விலங்குகள் எழுப்பும் ஓசைகளை பதிவு செய்தபடி இருக்கும்.
இப்படி பதிவுகளை காலவரிசைப் படுத்தி சேமித்து வைத்து, மீண்டும் ஆராயும்போது, வனவுயிர்கள் குறைந்து வருகின்றனவா, எவை அதிகம் குறைந்து வருகின்றன என்பதை தெளிவாக, துல்லியமாக விஞ்ஞானிகளால் அறிய முடியும். அதற்கேற்ப, தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க முடியும் என கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.