வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில் காதலியை ரயில் முன்பு தள்ளிக் கொன்ற காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மகள் கொலையான சம்பவம் அறிந்த அவரது தந்தை மாரடைப்பால் இறந்தார்.

சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 2ம் ஆண்டு கல்லூரி மாணவி சத்தியாவை (20) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது.
ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். தண்டவாளத்தில் விழுந்த பெண் மீது ரயில் ஏறியதில் மாணவி உடல் நசுங்கி பலியானார்.

சதீஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய சதீஷை போலீசார் கைது செய்தனர்.
சமரசம் செய்த போலீஸ்
கொலை செய்த சதீஷ், எஸ்.ஐ., மகன் என தெரியவந்துள்ளது. சத்தியாவும், தலைமை காவலரின் மகள் ஆவார். இதற்கு முன்பு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து சத்தியா தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இருவரும் போலீஸ் குடும்பம் என்பதால், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் சமரசம் செய்து வைத்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தற்கொலையா?
கொலையான சத்தியாவின் தந்தை மாணிக்கம், மகள் மரணத்தை தாங்க முடியாமல் மாரடைப்பால் காலமானதாக செய்தி வெளியானது. ஆனால், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.