திருவனந்தபுரம்: கேரளாவில் சில நாட்களுக்கு முன்னதாக நடந்த நரபலி விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், தற்போது பெண் மந்திரவாதி ஒருவர் சிறுவனை வசியம் செய்து மயங்கி விழச்செய்யும் வீடியோ மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் திருவல்லாவை சேர்ந்த தம்பதி, பணக்காரராக வேண்டும் என்ற ஆசையில் மாந்த்ரீகத்தை நம்பி, தமிழகத்தை சேர்ந்த பெண் உட்பட இரு பெண்களை நரபி கொடுத்துள்ளனர். நிர்வாண பூஜை செய்து, இரு பெண்களை துண்டு துண்டாக வெட்டியதுடன் நர மாமிசத்தையும் சமைத்து சாப்பிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கேரளாவை மட்டுமல்ல நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த செய்தியில் இருந்து மீள்வதற்குள் கேரளாவில் மற்றொரு மாந்த்ரீக சம்பவம் நடந்தேறியுள்ளது. மலையாளப்புழா நகரில் தேவகி என்னும் பெண் மந்திரவாதி, ஒரு சிறுவனை மாந்த்ரீகம் மூலமாக வசியம் செய்கிறார்.
சில நொடிகள் அமைதியாக உட்கார்ந்திருந்த சிறுவன் திடீரென மயங்கி சரிகிறான். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து அப்பெண்ணின் வீட்டை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்த போலீசார் பெண் மந்திரவாதி தேவகியை கைது செய்தனர்.
கேரளாவில் நரபலி விவகாரமே இன்னும் முடியாத நிலையில், வசியம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ வைரலாகியுள்ளது.