லண்டன் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், அந்நாட்டு நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அதிரடியாக நேற்று பதவி நீக்கம் செய்தார்.ஐரோப்பிய நாடான பிரிட்டன்
பிரதமராக, லிஸ் டிரஸ் சமீபத்தில் பொறுப்பேற்றார். தேர்தலுக்கு முன்னதாக இவர் அளித்த வாக்குறுதியில், மக்களுக்கான வரி சுமையை பெரும் அளவில் குறைப்பேன் என கூறியிருந்தார். பிரிட்டன் நிதி அமைச்சராக குவாசி குவார்டெங் நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில், பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நேரத்தில், டாலருக்கு நிகரான பிரிட்டன் பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்தன. நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்தது. இந்நிலையில், நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அப்பதவியில் இருந்து பிரதமர் லிஸ் டிரஸ் நேற்று அதிரடியாக நீக்கினார்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்டை அந்த பதவியில் நியமித்தார்.
இதற்கிடையே, பெருநிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை கைவிடப்படுவதாக
பிரதமர் லிஸ் டிரஸ் நேற்று அறிவித்தார். பிரிட்டன் பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கைகள், சர்வதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.