வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ''அமைச்சரவையை மாற்றி அமைக்க நிர்பந்தம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்,'' என, அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம், நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
அமைச்சர்கள், தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர். மாலை 6:10 மணிக்கு துவங்கிய கூட்டம், இரவு 7:00 மணிக்கு நிறைவடைந்தது.
கூட்டத்தில், புதிதாக தொழில் துவங்க, தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.
![]()
|
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழையின்போது பாதிப்பு ஏற்படாமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை, மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைப்பது; கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அளவை அதிகரிப்பது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளுக்கு, உரிய பதில் அளிப்பது; சட்டசபையில் நிறைவேற்ற வேண்டிய சட்ட மசோதாக்கள்; சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் அறிக்கைகள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கூட்டம் நிறைவடைந்த பின், அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், ''பொது வெளியில் பேசும்போது, எச்சரிக்கையாக இருங்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள். சட்டசபையில் உங்களை துாண்டும் வகையில், எதிர்க்கட்சியினர் பேசினாலும், பொறுமையாக இருங்கள்.
''மக்கள் பிரச்னைகளை கவனியுங்கள். அமைச்சரவையை மாற்றம் செய்ய, நிர்பந்தம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்,'' என, எச்சரிக்கை விடுத்துள்ளார்.