சென்னை : 'ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை, ஆதாரமற்ற தகவல்களை எடுத்து பகிர்வதும், ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு பரப்புவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது' என, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் தமிழக தலைவர் ஆடல் அரசன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' நாளிதழ், 'வாட்ஸ் ஆப்'பில் வந்தது எனக் கூறி, 'நம் உயிர் உள்ளவரை, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., நுழையக் கூடாது' என, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கூறியதாக, ஒரு 'மீம்ஸ்' நேற்று வெளியிட்டுள்ளது.

அந்த தகவல் முற்றிலும், ஆதாரமற்ற பொய்யான தகவல் என்பது மட்டுமின்றி, முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்தவரை, ஆர்.எஸ்.எஸ்., உடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களுடன் நட்பு பாராட்டினார்.
ஆர்.எஸ்.எஸ்., இரண்டாவது தலைவர் கோல்வால்கர், 51வது பிறந்த நாள் விழா, 1956ல் நாடு முழுதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரையில் நடந்த விழாவுக்கு, முத்துராமலிங்கத் தேவர் தலைமை வகித்தார். அந்த விழாவில் அவர் பேசுகையில், 'தம் கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ்., கருத்துக்களோடு இணைந்தே இருந்து வந்திருக்கிறது' என்றார்.
உண்மை இப்படி இருக்க, தேச பக்தர்களாலும், தெய்வ பக்தர்களாலும் மதிக்கப்படும் முத்துராமலிங்க தேவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை எதிர்த்தார் என கூறி, மக்கள் இடையே ஆர்.எஸ்.எஸ்., குறித்த தவறான, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த, தி.மு.க.,வும் அதன் நாளிதழும் முயற்சிப்பது வெட்கக்கேடானது.
ஒரு மாநிலத்தை ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை, ஆதாரமற்ற தகவல்களை எடுத்துப் பகிர்வதும், ஆர்.எஸ்.எஸ்., குறித்து அவதுாறு பரப்பவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.