பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது நில மோசடி புகார்களை விசாரித்து வரும் கர்நாடக லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி சிவராஜ் பாட்டீல் மீது, அரசு விதிமுறைகளை மீறி, நிலங்களை வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுரங்கத் தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா சமர்ப்பித்த அறிக்கையில், முதல்வர் எடியூரப்பா, அவரது மகன்கள், மருமகன் உட்பட பலர் இடம் பெற்றது குறித்து, லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி வருகிறது. கர்நாடக புதிய லோக் ஆயுக்தா நீதிபதியாக சிவராஜ் பாட்டீல் பதவியேற்று, ஒரு மாதம் கூட ஆகவில்லை. இதற்கிடையில், அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் ஒருவருக்கு அரசோ அல்லது தனியார் கூட்டுறவு சொசைட்டியோ வீடு அல்லது நிலம் ஒதுக்கியிருந்தால், மேற்கொண்டு அவரோ, அவரது உறவினர்களுக்கோ நிலம் பெறுவதற்கு உரிமையில்லை என்பது விதிமுறை. லோக் ஆயுக்தா நீதிபதி சிவராஜ் பாட்டீலுக்கு ஏற்கனவே இரண்டு கூட்டுறவு சொசைட்டிகள், இரண்டு வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு மனையை, அவரது மனைவி அன்னபூர்ணாவுக்கு, வயாலிகாவல் ஹவுஸ் பில்டிங் கோ ஆப்ரேடிவ் சொசைட்டி ஒதுக்கியுள்ளது. எடியூரப்பாவின் குடும்ப நிறுவனமான தவளகிரி பிராப்பர்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் குறித்து, லோக் ஆயுக்தா நடத்திய விசாரணையின் போது தெரிய வந்தது. சிவராஜ் பாட்டீல் குடும்பத்தினருக்கு பெங்களூரில் மூன்று வீடுகள் உள்ளன. இரண்டு வீடுகள் அவர் பெயரிலும், ஒன்று அவரது மனைவி பெயரிலும் உள்ளது. 1982ம் ஆண்டு வசந்த் நகரில், 2,400 சதுர அடியில் ஒரு வீட்டு மனை வாங்கியுள்ளார். 1994ம் ஆண்டு, 9,600 சதுர அடியில் மற்றொரு வீட்டு மனையை, அல்லால சந்திராவில் கர்நாடக மாநில ஜூடிஷியல் டிபார்ட்மென்ட் எம்ப்ளாயிஸ் ஹவுசிங் பில்டிங் கோ ஆப்ரேடிவ் சொசைட்டி மூலம் வாங்கியுள்ளார். 2006ல், இவரது மனைவி, நாகவரா அருகில், 4,012 சதுர அடியில் வயாலிகாவல் ஹவுஸ் பில்டிங் கோ ஆப்ரேடிவ் சொசைட்டி மூலம் வாங்கியுள்ளார். இது, 1993ம் ஆண்டு, மாநில அரசு விதிமுறைகளுக்கு முரண்பாடானதாகும். இது போன்று உயர் பதவியில் உள்ளவர்கள், மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும். இவர், விதிமுறைகளை மீறி, வீட்டு மனைகளை வாங்கியிருக்கிறார். லோக் ஆயுக்தாவின் விசாரணையின் போது, சிவராஜ் பாட்டீல் மனைவி வீட்டுமனை வாங்கியிருப்பது தெளிவாகத் தெரிய வந்துள்ளது என்று, ஊழல் கண்காணிப்பு குழுவினர் கூறினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்து லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி சிவராஜ் பாட்டீல் கூறுகையில், ""நான் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. எனது குடும்பத்தினர் ஏலத்தின் மூலமாகவே வீட்டுமனை வாங்கியுள்ளனர். வயாலிகாவல் ஹவுஸ் பில்டிங் கோ ஆப்ரேடிவ் சொசைட்டி, அவர்களின் கடனை தீர்ப்பதற்காகவே இந்த நிலங்களை விற்பனை செய்தனர். அந்த நேரத்தில், இந்த விதிமுறைகள் அதற்கு ஏற்புடையதல்ல. இந்த வீட்டுமனை வாங்கியதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், கடந்த 14ம் தேதி என் மனைவி, அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். ""அதே போன்று, கர்நாடக மாநில ஜூடிஷியல் டிபார்ட்மென்ட் எம்ப்ளாயிஸ் ஹவுசிங் பில்டிங் கோ ஆப்ரேடிவ் சொசைட்டி மூலம் வாங்கிய நிலம் விதிமுறைக்கு மாறானதல்ல என, லோக் ஆயுக்தாவும் கூறியுள்ளது,'' என்றார்.
இது குறித்து கர்நாடக அமைச்சர் சுரேஷ்குமார் கூறுகையில், ""தற்போதைய லோக் ஆயுக்தா நீதிபதி சிவராஜ் பாட்டீல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்துள்ளார். அவர் மீது கூறப்படும் நிலங்கள் பிரச்னை குறித்து, அவருக்கு வழிமுறைகள் நன்கு தெரிந்திருக்கும். இதனால், தவறு ஏற்பட வாய்ப்பில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE