வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கல்வான் மோதலில் சீனா வெற்றி பெற்றுவிட்டதாகவும், லடாக், அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக காட்டும் சீன மொழி வரைபடத்தை அந்நாட்டு அதிபர் வெளியிட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ள பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சீனாவின் இந்த மாநாட்டில் பங்கேற்றது மட்டுமல்லாமல், எதிர்ப்பு தெரிவிக்காத பிரதமர் மோடி, சீன அதிபரிடம் பணிந்து, தேசநலனுக்கு துரோகம் செய்துவிட்டதாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து எல்லையில் பதற்றம் நிலவியதால், இரு தரப்பும் எல்லையில் படைகளைக் குவித்தன.
பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ தலைவர்கள், அதிகாரிகள் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கிடையே கல்வான் உள்ளிட்ட இந்தியாவின் சில பகுதிகளை சீனாவின் பகுதியாக குறிப்பிட்டு அந்நாடு வரைபடம் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒருபகுதியாக காட்டும் வகையில் சீன மொழியில் அந்த பகுதிகளை குறிப்பிட்டு எஸ்.சி.ஓ மாநாட்டில் சீனா வழங்கி உள்ளது. பிரதமர் மோடி இந்த கூட்டத்துக்கு சென்று இந்தியாவின் தேசநலனுக்கு துரோகம் செய்தார். இந்தியாவுக்கு கடைசி அடி, சீன மொழியில் எழுதப்பட்ட அந்த வரைபடத்தை ரஷ்யாவும் ஏற்றுக்கொண்டது தான்.

1995ம் ஆண்டு பரஸ்பரம் ஒப்புக்கொண்ட எல்லை கட்டுப்பாட்டு கோடுகளை கடந்து டெப்சாங், கல்வான், கைலாஷ் மலைகளின் பெரும் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. ஆனால் மோடி இன்னும் ஒன்றும் நடக்காதது போன்ற மனநிலையிலேயே உள்ளார்.
சீன மொழியில் எழுதப்பட்ட வரைபடம் வழங்கப்பட்டதாக நான் கூறியதற்கு ஆதாரத்தை கேட்கிறார்கள். ஷாங்காய் கூட்டுறவு மாநாட்டில் (எஸ்.சி.ஓ) சீனாவின் வரபட நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது, பிரதமர் மோடிக்கும் ஒரு நகல் வழங்கப்பட்டது. ஆனால், மோடி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாரா? அவரிடம் கேளுங்கள்.
கல்வான் தாக்குதலில் சீனா வெற்றி பெற்றுவிட்டதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் உலகிற்கு அறிவித்து வருகிறார். 18 முறை சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சு நடத்திய பிறகும் சீன அதிபரின் பேச்சு, பாரத மாதாவை புண்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.
இதற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். ஆம்! 2020-ல் நம் ராணுவ வீரர்களின் தீரத்துக்கும் வீரத்துக்கும் பிறகும்கூட அங்கிருந்து ராணுவப்படையை விலக்கியதன் மூலம் நாம் சீனாவுக்கு கல்வானை பரிசாக அளித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.