கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லின்; தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பத்மா. இந்த இரு பெண்களும், எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த முகமது ஷபி என்பவரால் கடத்திச் செல்லப்பட்டு, பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த பகவல்சிங், லைலா தம்பதி வீட்டில் நரபலி கொடுக்கப்பட்டு உள்ளனர். நரபலி கொடுக்கப்பட்ட இரு பெண்களின் உடல்களும், துண்டு துண்டாக வெட்டப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.
சமூக வலைதளத்தில், ஸ்ரீதேவி என்ற பெயரில் செயல்பட்டுள்ள முதன்மை சதிகாரரான முகமது ஷபி, இளமையாக இருப்பது பற்றியும், கோடீஸ்வரராவது பற்றியும் எழுதியுள்ளதை பார்த்து தான், பகவல்சிங், லைலா தம்பதி, அவனுக்கு அறிமுகமாகி உள்ளனர். தன் பேச்சுத் திறமையால், அந்த தம்பதியை தன் வசப்படுத்திய முகமது ஷபி, மாந்திரீகம் செய்வதில் வித்தகர் போலவும் நடித்துள்ளான்.
அவன் பேச்சை நம்பிய தம்பதி, மனிதரை நரபலி கொடுத்தால், தங்களுக்கு செல்வம் சேரும் என்ற மூட நம்பிக்கையில், அப்பாவியான இரு பெண்களை கொன்றுள்ளனர். பகுத்தறிவு அதிகம் பேசும், முற்போக்கு சிந்தனையாளர்கள் நிறைந்த, கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில், இந்த கொடூர கொலைகள் அரங்கேறியுள்ளது, நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதல் முறையாக ஒரு பெண்ணை நரபலி கொடுத்த பிறகும், தங்களின் பணக்காரராகும் ஆசை நிறைவேறாததால், துஷ்டன் முகமது ஷபியின் ஆலோசனைப்படி, இரண்டாவது முறையாகவும் படுபாதகச் செயலைச் செய்துள்ளனர். அதனால், தற்போது கைது செய்யப்பட்டு கம்பி எண்ணுகின்றனர்.
பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி, வேறு எந்த மாநிலமும் அடைய முடியாத முன்னேற்றத்தை கண்டுள்ளது கேரளா. அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் அவர்கள் மேற்கொண்ட இயக்கங்கள், பரப்பிய சீர்திருத்த கருத்துகளால், பைத்தியகாரத் தனமான பல நடவடிக்கைகளில் இருந்து கேரள மாநிலம் மீட்டெடுக்கப்பட்டது.
சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாடு என, பல குறியீடுகளில் கேரள மாநிலம் முன்னேற்றம் அடையவும், சமூக சீர்திருத்தவாதிகள் மேற்கொண்ட இயக்கங்கள் உதவின என்றால், அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில், சூனியங்கள் செய்வது, மனிதனின் விருப்பங்களை நிறைவேற்ற நரபலி கொடுப்பது போன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறினால், கேரள மாநிலத்தின் பெயர் கெடுவதுடன், அம்மாநிலத்தை மீண்டும் கற்காலத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதில் மாற்றமில்லை.
மந்திர சக்திகள் வாயிலாக, மக்களின் பொருளாதாரம், உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்பது தொடர்பான விளம்பரங்கள், கேரளாவில் அதிக அளவில் வெளிவருவதாக கூறப்படுகிறது. தற்போது, பத்தனம்திட்டா தம்பதி, இரு பெண்களை நரபலி கொடுப்பதற்கு, சமூக வலைதளம் வாயிலாக முகமது ஷபி வெளியிட்ட விளம்பரமும், அவர்கள் படுபாதக செயலில் ஈடுபடுவதற்கு துாண்டுகோலாக இருந்து உள்ளது.
எனவே, இதுபோன்ற விளம்பரங்களை கேரள மாநில அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விளம்பர வெளியிடுவோர் எந்தவிதமான வழிமுறைகளை, தங்களை நாடி வருபவர்களுக்கு போதிக்கின்றனர் என்பதை கண்டறிந்து, கொடூர சம்பவங்கள் நிகழும் முன், சதிகாரர்களை கைது செய்து தண்டிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, பில்லி சூனியம் மற்றும் மனித நரபலிக்கு எதிராக, மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டிருப்பது போல, கேரளாவிலும் சட்டம் இயற்ற வேண்டும். அத்துடன், சமூக சீர்திருத்த இயக்கங்கள் வாயிலாகவும், வேறு பல வகையிலும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இப்போது நடந்துள்ள நரபலி சம்பவத்தை தனிப்பட்ட ஒரு சம்பவமாக கருதி விட்டு விடாமல், சமூகத்தை பாதிக்கும் விஷயமாக கருத வேண்டும். அத்துடன், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தவிர்ப்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகவும் கருதி, அம்மாநில அரசு செயல்பட வேண்டும். அதுவே, நாட்டு நலனில் அக்கறையுடைய அனைவரின் எதிர்பார்ப்பாகும்.