ஜெயலலிதா 2016 டிச., 4ல் இறந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.
விசாரணை ஆணையம் அறிக்கையில்,'முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்த நேரம், 2016 டிச., 5 இரவு 11:30 மணி என, அப்பல்லோ மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சாட்சியங்கள் அடிப்படையில், ஜெயலலிதா இறந்த நேரம், 2016 டிச., 4 மதியம் 3:00 மணி முதல் 3:50 மணியாகும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருக்குறள் வாயிலாக உணர்த்தும் ஆணையம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்த, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி, விசாரணை கமிஷன் அறிக்கை முடிவில், இரண்டு திருக்குறள்களை குறிப்பிட்டுள்ளார்.
நோய் என்ன, நோய்க்கான காரணம் என்ன, நோய் தீர்க்கும் வழி என்ன என்பதை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறும், 'நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும், வாய் நாடி வாய்ப்பச் செயல்' என்ற குறளை குறிப்பிட்டுள்ளார்
அடுத்து, 'வேல் ஏந்திய வீரரும், கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டால், நரிகள் கொன்று விடும்' எனக் கூறும், 'காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு' என்ற குறளை கூறி, அறிக்கையை முடித்துள்ளார்.