பன்னீர்செல்வம் சாட்சியம் குறித்து, விசாரணை கமிஷன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, பன்னீர்செல்வத்துக்கு தெரிவிக்கப்படவில்லை.
அவருக்கு அப்பல்லோ மருத்துவமனை, சிகிச்சை தொடர்பான முடிவுகளை, சசிகலா ஒப்புதலுடன் செய்தனர் என்ற தகவல் தெரியும். சுகாதாரத் துறை அமைச்சரும், துறை செயலரும், சிகிச்சை முறைகள் குறித்து அறிந்திருப்பது தெரிந்திருந்தது.
அவரது சாட்சியத்தின்படி, இருமுறை அவர் விளக்கங்களுக்கான சந்திப்பில் பங்கேற்றிருந்தார். ஆனால், முழுமையான சிகிச்சை விபரம், முற்றிலும் ரகசியமாக இருந்தது.
உதாரணமாக, தலைமைச் செயலரும், சசிகலாவும், அனைத்து சிகிச்சை சம்பந்தமான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளனர். அவர்கள் அப்போதைய பொறுப்பு முதல்வரான பன்னீர்செல்வம் உட்பட, யாருக்கும் தெரிவிக்காமல் இருந்தனர் என்பது தெரிகிறது.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து, ஒரு முறை சசிகலாவிடம் விசாரித்தபோது, அவர் அனைத்தும் சரியாக நடப்பதாகக் கூறியதாக, பன்னீர்செல்வம் சாட்சியம் அளித்துஉள்ளார்.
அவருக்கு எதுவும் தெரிவிக்காத போதிலும், அவரும் மற்ற அமைச்சர்களும் பொறுமை காத்து அமைதியாக இருந்தனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் பதவிக்கு தன்னை பொருத்திக் கொள்ள தயார் நிலையில் இருந்தது, ஜெயலலிதா வாரிசாக தன்னை நிலைநிறுத்தியது தற்செயலான நிகழ்வாக தோன்றவில்லை.
அதிகார மையத்தின் மர்ம சூழ்ச்சிகளால், புதிய பதவி அவருக்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஏமாற்றத்தால் கோபமடைந்த பன்னீர்செல்வம், அரசியல் லாபத்தை அடையும் நோக்கில், ௨௦௧௭ பிப்ரவரியில் தர்மயுத்தம் துவங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.