மருத்துவமனையில் இருந்தபோது, ஜெயலலிதா சாப்பிட்ட உணவு குறித்தும், விசாரணை கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன் விபரம்:
'பொட்டாசியம்' மற்றும் சர்க்கரை உணவுகள் உட்கொள்வதை, ஜெயலலிதா உடல்நிலையை கருத்தில் வைத்து கட்டுப்படுத்த வேண்டி இருந்தது. ஆனாலும், அவருக்கு எவ்விதமான கட்டுப்பாடுமின்றி, உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டன என்பதை, உணவு அட்டவணையில் இருந்து காணலாம்.
உணவு தொடர்பாக, பல்வேறு ஆதாரங்களை கவனமாக ஆய்வு செய்ததில், அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, உணவு, ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்காமல் இருந்ததால், அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்தது.
இச்சமயத்தில், டாக்டர் பாபு ஆபிரகாம், 'ஜெயலலிதா வெளிநாட்டிற்கு சென்றிருந்தால், மருத்துவமனையின் மற்ற நோயாளிகளைப் போல, அவரும் ஒரு சாதாரண நோயாளியாக இருந்திருப்பார்; மறைந்த முதல்வரை விட, செவிலியர்கள் அதிக அதிகாரம் செலுத்தியிருப்பர்' எனக் கூறியதை, ஆணையம் நினைவுகூருகிறது.
அவர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்ததால், உணவு கட்டுப்பாட்டை, உணவியல் நிபுணரால் வலியுறுத்த முடியவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.