வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'தமிழகத்திற்குள் சீனர்கள் ரகசியமாக ஊடுருவி உள்ளனர். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, இந்தியாவை முடக்குவது தான் சீனாவின் நோக்கம்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
இலங்கை கடலோர பகுதிகளில், கடல் அட்டை சாகுபடி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்வதாக கூறி, முல்லை தீவு, பருத்தி தீவு, அனலை தீவு, மீசாலை உள்ளிட்ட பகுதிகளில் சீனர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன், சீன ராணுவ வீரர்களின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது.
செயற்கை கோள்கள், டிரோன்கள் உள்ளிட்ட அதிநவீன கருவிகளின் உதவியுடன், சீன படையினர் தமிழகத்தின் கடலோர பகுதிகளை உளவு பார்க்க துவங்கி உள்ளனர். இலங்கையில் இருந்து, அந்நாட்டு அரசியல் கட்சி ஒன்றின் உதவியுடன் சீனர்கள் பலர், தமிழகத்திற்குள் ரகசியமாக நுழைந்து உள்ளனர்.
இலங்கை வழியாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை கண்காணிப்புக்குள் கொண்டுவந்து, தொல்லை கொடுக்க வேண்டும்; அதன் வாயிலாக இந்தியாவை முடக்க வேண்டும். இந்திய பெருங்கடல் பகுதியில், தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பது தான் சீனாவின் நோக்கம்.

கடந்த 2021 டிசம்பரில், இலங்கைக்கான சீன துாதர் கி சென்ஹாங், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றார். ராமர் பாலத்தின் மூன்றாவது திட்டு வரை வந்த அவர், டிரோன்கள் வாயிலாகவும், தமிழகத்தின் முக்கிய பகுதிகளை உளவு பார்த்தார். இவற்றை எல்லாம் அறிந்திருந்தும், மத்திய அரசு அமைதி காப்பது ஏன் என்று தெரியவில்லை.
இந்தியாவுக்கு எதிரான, சீனாவின் சதித் திட்டங்களுக்கு, இலங்கை அரசு தெரிந்தே உதவி செய்கிறது. சீனாவின் திட்டம் வெற்றி பெற்றால், அது இந்திய இறையாண்மைக்கு, சரி செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தி விடும். எனவே, சீனாவின் சதித் திட்டத்தை முறியடிக்க, தென் மாநில கடலோர பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் வலுப்படுத்த வேண்டும்.
இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு, இலங்கை மண்ணை, சீனா பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என, இலங்கை அரசை, இந்தியா எச்சரிக்க வேண்டும். அதை ஏற்காவிட்டால், இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கையை, மத்திய அரசு திருத்தி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.