வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ரா.சேது, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வீட்டில் இருக்கும் போது, நாம் காலணி அணிவது இல்லை. வெளியே செல்லும் போது தான் காலணி அணிகிறோம். அதுபோலவே, தமிழகத்தில் இருக்கும் போது தமிழில் பேசுகிறோம். வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது, அந்தந்த மாநில மொழிகளில் பேசுவது அவசியம். ஹிந்தி மொழியை கற்றுக் கொள்வதும் கூட அப்படித் தான்' என, ஹிந்தி மொழியின் அவசியத்தை வலியுறுத்தி, தீர்க்க தரிசனமாக அன்றே சொன்னார் மூதறிஞர் ராஜாஜி.
அவரின் அந்த பேச்சை தற்போது, மக்கள் கவனத்தில் கொள்ளத் துவங்கி உள்ளனர். திராவிட செம்மல்கள் சொல்வதை கேட்கும் நிலையில் இல்லை. அதனால் தான், தெருவுக்கு தெரு ஹிந்தி டியூஷன் சென்டர்கள் முளைத்து வெகு நாட்களாகி விட்டன.
அரசு பள்ளிகளில் தான், ஹிந்தி ஒரு பாடமாக இல்லை. தனியார் பள்ளிகளில் மாணவர்கள், ஹிந்தியை விரும்பி கற்கின்றனர். வேலை நிமித்தமாகவும், பேச்சு மொழியாகவும், ஹிந்தியை கற்க முனைவதில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
தி.மு.க.,வினர் பேச்சைக் கேட்டு, சில தலைமுறையினர், முன்னர் ஹிந்தியை புறக்கணித்தது குறித்தும், அதை கற்க முயலாதது குறித்தும், இப்போது அழுது புலம்புகின்றனர்.
![]()
|
முதல்வர் ஸ்டாலினின் வாரிசான உதயநிதி எம்.எல்.ஏ., ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில், செத்த பாம்பை, அது காய்ந்து கருவாடான பிறகு அடித்திருக்கிறார். எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு, உதயநிதி செய்ய வேண்டியது எவ்வளவோ உள்ளது; முதலில், அவர் அதைச் செய்ய வேண்டும்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்கிற பருப்பு இனி வேகாது. அதற்காக போராட்டம் நடத்துவது வீண். இதை, அவர் புரிந்து கொண்டால் சரி.