வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டுள்ள காங்., - எம்.பி., ராகுல், தன் கால்களில் கொப்புளங்கள் ஏற்படவில்லை என்றும், 'சன் ஸ்க்ரீன் லோஷன்' எதுவும் பயன்படுத்துவதில்லை என்றும் தொண்டர்களிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, 3,570 கி.மீ., துாரம், 'ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரிலான நடை பயணத்தை காங்., - எம்.பி., ராகுல் சமீபத்தில் துவக்கினார். தமிழகம், கேரளாவை கடந்து தற்போது கர்நாடகாவில் நடை பயணம் தொடர்கிறது. ராகுலுடன் ஏராளமான காங்., தொண்டர்கள் நடை பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் காங்., தலைவர் தேர்தலில் ஓட்டளித்த பின், நடைபயணத்தில் தன்னுடன் ஈடுபட்டுள்ள இளைய தலைமுறையினருடன் ராகுல் உரையாடினார்.

அந்த காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், 'நீண்ட துாரம் நடக்கும்போது காலில் கொப்புளங்கள் ஏற்படுமே' என, ஒருவர் கேட்கிறார். அதற்கு, 'எல்லார் காலிலும் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதா' என, ராகுல் கேட்கிறார். 'எனக்கு இல்லை' என ஒரு பெண் பதில் அளிக்கிறார். 'எனக்கும் கொப்புளங்கள் ஏற்படவில்லை' என, ராகுல் தெரிவித்தார்.
'வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன, 'சன் ஸ்க்ரீன் லோஷன்' பயன்படுத்துகிறீர்கள்' என இளைஞர் ஒருவர் கேட்டதற்கு, 'வெயிலில் அலைவதால் முகம் ஆங்காங்கே கறுத்து இருக்கிறது. 'என் தாய் சில சன் ஸ்க்ரீன் லோஷன்களை அளித்தார். நான் எதையும் இதுவரை பயன்படுத்தவில்லை' என, ராகுல் பதில் அளித்தார்.