
சென்னை நேரு ஸ்டேடியத்தில் அப்படியொரு கூட்டத்தை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை.
கிரிக்கெட் போட்டி நடைபெறும் போதெல்லாம் கூடும் கூட்டத்தை பார்த்து இதே போன்று பிற விளயைாட்டுகளுக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தால் அந்த விளையாட்டும் வளரும் வீரர்களும் பிரகாசிப்பார்களே என்ற ஆதங்கம் ஏற்படுவதுண்டு.

அந்த ஆதங்கத்தை துடைத்தெறிவது போல சென்னையில் துவங்கிய ஐஎஸ்எல் கால்பந்தாட்ட திருவிழாவின் போது ரசிகர்கள் மகத்தான அளவில் திரண்டிருந்தனர்.

முதல் போட்டி சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெற்றது, ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாகவே இருந்தது முதல் பாதியில் பெங்களூரு அணி ஒரு கோல் போட்டது இரண்டாவது பாதியில் சென்னை அணி ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தது.பெங்களூரு அணியின் கோல்கீப்பரின் திறமையால் பல கோல்கள் தடுக்கப்பட்டன

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 9வது சீசன் . வரும் மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த தொடரில் 11 அணிகள் பங்கேற்கிறது.
முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு 4 அணிகளுக்கு பதிலாக 6 அணிகள் தகுதி பெற உள்ளது. பிளே ஆப் சுற்றில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணி நேரடியாக தகுதி பெறும்.
எலிமினேட்டர் சுற்றில் 3வது இடம் பிடித்துள்ள அணி 6வது இடம் பிடித்த அணியுடனும், 4வது இடம் பிடித்த அணி, 5வது இடம் பிடித்த அணியுடன் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேறிவிடும்.
வெற்றி பெறும் அணி, அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். சென்னை அணியை பொறுத்தவரை புதிய வீரர்கள், புதிய பயிற்சியாளர்களுடன் களமிறங்குகிறது. 2 முறை சாம்பியனான சென்னை கால்பந்து அணி, கடந்த 5 ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. கடைசியாக 5 சீசனில் வெறும் 2 முறை தான் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை தகுதி பெற்று இருக்கிறது

இதனால் இழந்த பெருமையை மீட்கும் முயற்சியில் சென்னை கால்பந்து அணி களமிறங்குகிறது. ஜெர்மனியை சேர்ந்த பயிற்சியாளர் தாமஸ் பிராடாரிச், சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று மற்ற அணிகளில் விளையாடிய நாராயன் தாஸ், முகமது சாஜித் ஆகியோரை ஒப்பந்தம் செய்து சென்னை அணியின் தடுப்பாட்டத்தை பலப்படுத்தியுள்ளார் பயிற்சியாளர் பிராடாரிச்.
சென்னை அணியின் இதய துடிப்பாக அனிருத் தப்பா இருக்கிறார். இவரை சுற்றியே சென்னை அணியின் ஆட்டம் இருக்கும்.இதே போன்று ஐரோப்பிய கால்பந்து லீக் தொடரில் விளையாடிய அனுபவம் உள்ள டியாகினி சென்னை அணிக்கு பெரும் பலமாக இருப்பார் என கருதப்படுகிறது. சென்னை அணி 18 புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரானா அச்சுறுத்தல் காரணமாக 2019-20ம் ஆண்டு சென்னையில் நடைபெற இருந்த இந்தியன் சூப்பர் லீக்(ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் கோவாவுக்கு மாற்றப்பட்டன. தொடர்ந்து 2020-21, 2021-22 ஐஎஸ்எல் தொடர்களும் ரசிகர்களின்றி மூடிய அரங்குகளில் கோவாவில் மட்டும் நடந்தன. கொரோனா பரவலும், தாக்கமும் குறைந்துள்ள நிலையில் இந்த 2022-23ம் ஆண்டுக்கான 9வது ஐஎஸ்எல் தொடர் அக்.7ம் தேதி கொச்சியில் தொடங்கியது. கூடவே அந்தந்த அணிகளுக்கு உரிய நகரங்களிலும் ஐஎஸ்எல் ஆட்டங்களும் நடக்கின்றன. ரசிகர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுவும் ஐபிஎல் மாதிரிதான் சென்னை அணியில் சென்னை அணி வீரர்கள் யாரும் இருப்பது போல தெரியவில்லை ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளியூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள்தான் விளயைாடினர் அதனால் என்ன சென்னை என்ற பெயரைத்தாங்கியதற்கே நாங்கள் ஆதரவு தருவோம் என்று ரசிகர்கள் தாரை தப்பாட்டையுடன் காலரியில் இருந்தபடி உற்சாகப்படுத்தினர்.
கோல்போடுவதை பல கோணங்களில் காட்டும் பெரிய திரை மைதானத்தில் வைக்கப்படவேண்டும் நேரடியாக டிக்கெட் விற்கும் கவுண்டர்கள் திறக்கப்படவேண்டும் ரசிகர்களுக்கு குடிநீர் வசதி உள்ளீட்ட அடிப்பபடை வசதிகள் நிறயை செய்துதரப்படவேண்டும் இப்படி இன்னும் சில வசதிகள் செய்து கொடுத்தால் சென்னையில் அடுத்தடுத்து நடைபெற உள்ள கால்பந்து போட்டிகள் சந்தேகமில்லாமல் களைகட்டும்.
-எல்.முருகராஜ்.