கூடிவரும் 'ரோபோ' தொகை!
உலக ரோபோக்கள் கணக்கெடுப்பினை பன்னாட்டு 'ரோபோ'வியல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2021ல் உலகெங்கும் இருக்கும் தொழிற்சாலைகளில் 5.17 லட்சம் புதிய ரோபோக்கள் நிறுவப்பட்டு உள்ளன. ஒரே ஆண்டில் இத்தனை ரோபோக்கள் பணியமர்த்தப்படுவது இதுவே முதல் முறை.
அதேபோல, ஏற்கனவே ஆலைப் பணிகளில் இருக்கும் ரோபோக்களின் மொத்த எண்ணிக்கை, 35 லட்சம் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு ரோபோக்களின் யுகம் தொடங்கிவிடும் போலிருக்கிறது.
விண்கல் தொல்லை
பூமியை நோக்கி வரும் விண்கற்களை, லேசாக தட்டினால் அது பூமிக்கு வராமல் திசை மாறிப் போகும் என்று காட்டியது 'நாசா'. அதையடுத்து, நமது பூமி, சூரியனை சுற்றும் 4.5 கோடி கி.மீ., சுற்றுவட்டப் பாதைக்கு அருகே வரும் வாய்ப்புள்ள, விண்கற்களை விஞ்ஞானிகள் கண்காணிக்கத் தொடங்கி உள்ளனர். பல விண்வெளி கண்காணிப்பகங்கள் கொடுத்த தகவல்களின்படி, இதுவரை 30 ஆயிரம் விண்கற்கள், பூமிக்கு அருகாமையில் வரும் வாய்ப்புள்ளவை என்று தெரியவந்துள்ளது.
செடியை வார்க்கும் '3டி'
அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலைனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உயிரி முப்பரிமாண அச்சியந்திரத்தில், தாவர செல்களைக் கொண்ட திரவ மை மூலம் 'அச்சிட்டனர்'. இது செல்களின் தகவல் பரிமாற்ற முறைகளையும், அவற்றின் மீது சுற்றுச் சூழலின் தாக்கம் குறித்தும் ஆராய உதவும்.
அப்படி அச்சிட்ட சில பயிர்களின் செல்கள் சில மணி நேரம் வளர்ந்து பிறகு மடிந்தன. விரைவில் முப்பரிமாண அச்சிட்ட பயிர் செல்களை வளரச் செய்யும் முறையை விஞ்ஞானிகள் கண்டறிவர்.
அதிவேக இணையம்
உலகிலேயே மிக வேகமாக இயங்கும் இணைய நெட்வொர்க் எங்கே உள்ளது? அமெரிக்காவிலுள்ள ஆற்றல் அறிவியல் நெட்வொர்க்தான் அது.
முழுதும் ஆற்றல் அறிவியல் விஞ்ஞானிகள் மட்டுமே பயன்படுத்தும் இணைய சேவை, அண்மையில், 'இ.எஸ்நெட்6' என்ற வலைப்பின்னல் முறைக்கு மேம்படுத்தப்பட்டது. இதையும் கேளுங்கள்: இதன் தகவல் பரிமாற்ற வேகம், விநாடிக்கு 46 டெராபிட்ஸ்! குவாண்டம் கணினி யுகத்துக்கு மெல்ல மாறத் தயாராகும் விஞ்ஞானிகளுக்கு இதெல்லாம் சும்மா பிஸ்கெட்ஸ் தான்.
செயற்கை நுண்ணறிவு 'சுட்டிய' பழம்
பழங்களை தரப் பரிசோதனை செய்யாமல் கடைகளுக்கு அனுப்புவதால், கோடிக் கணக்கில் நஷ்டமாகின்றன.
எனவே, இஸ்ரேலைச் சேர்ந்த நியோலிதிக்ஸ் நிறுவனம், சிறப்பு ஸ்கேனர் மூலம் பழத்தை, அது கனியா, காயா, வாடியதா, உரம், பூச்சி மருந்து நெடி உள்ளதா என்பதையெல்லாம் நொடியில் சோதித்து அறியும் நுட்பத்தை உருவாக்கி உள்ளது.
இதை செயற்கை நுண்ணறிவு மென்பொருளே சோதிப்பதால், பல மடங்கு துல்லியமாகவும், விரைவாகவும் தரம் பிரிக்க முடிகிறது.