
பட்டாசு இல்லாத தீபாவளி கிடையாதுதான் ஆனால் இன்றைய காலகட்டத்தில் முதலில் வாங்கிய பட்டாசை இப்போது தீபாவளி நெருக்கத்தில் பட்ஜெட் பார்த்து வாங்குகிறார்கள்.
பட்டாசுக்கு வரவேற்பும் அதன் விற்பனையும் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க சென்னை தீவுத்திடலில் போடப்பட்டுள்ள பட்டாசு கடைகளுக்கு ஒரு விசிட் அடித்தேன்
இங்கே ஏதோ பட்டாசு கண்காட்சி நடப்பது போல நுழைவுக்கட்டணம் எல்லாம் வசூலித்தார்கள் இதை முதலில் விடவேண்டும் ஊரெங்கும் பட்டாசு கடை இருக்கிறது அதை எல்லாம் விட்டுவிட்டு இங்கு வருகின்றனர் என்றால் அவர்களை சூடான குளிரான பானங்கள் கொடுத்து வரவேற்கவிட்டாலும் இது போல வாசலில் நிற்கவைத்து கட்டணம் வாங்குவதால் மக்கள் எரிச்சல்தான்படுகின்றனர்.

பட்டாசு விற்பனையில் உச்சத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் போர்டுகள்தான் அனைத்து கடைகளிலும் இருக்கிறது அங்குள்ள இருபதிற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் உள்ள பெரும்பாலான பட்டாசு ரகங்களும் ஒரு கடையில் இருப்பது போலத்தான் இருக்கிறது
எந்த கடையில் வாங்கினாலும் ஒரே விலைதான் வாங்கும் தொகை்கு ஏற்ப நகைக்கடையில் தள்ளுபடி தருவது போல தள்ளுபடி தருகின்றனர்.
லட்சுமி வெடி குருவி வெடி என்று பாராம்பரியமான வெடிகள் இப்போதும் விற்பனையில் இருந்தாலும் பேன்சி ரக பட்டாசுகளும் கிப்ட் பாக்ஸ் பட்டாசுகளும்தான் அதிகம் விற்பனையாகின்றன.
வாத்து போல வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பட்டாசை கொளுத்தினால் அது வாத்து போலவே பலவண்ண நெருப்பை கக்கியபடி தாவி தாவிச் செல்வதுடன் முட்டைவடிவிலான பட்டாசையும் இட்டுச் செல்லுமாம்.

இது தவிர போட்டோ பிளாஷ் போல சத்தமும் வெளிச்சமும் தரும் பட்டாசு,டிரோன் பட்டாசு,ஹெலிகாப்டர் பட்டாசு,வட்டவடிவில் பூச்சொரியும் பட்டாசு என்று பலவித பட்டாசுகளும் குவிந்துள்ளது.
ஒரே பட்டாசு ஊரையே கலக்கணும் எனும் இளைஞர்களுக்கு ஏற்ப கொளுத்தினால் விடாமல் அரைமணி நேரத்திற்கு மேல் அதிர்வெடி சத்தம் கிளப்பும் பட்டாசுகளும் உண்டு.
குழந்தைகளுக்கான வண்ண மயமான துப்பாக்கிகளும் அதில் பொருத்தி வெடிக்கக்கூடிய ரோல் கேப் உள்ளீட்டவைகளும் நிறைய ரகங்களில் உள்ளது ஆனால் அது பிராண்டாக இல்லை என்பதால் சரியாக வெடிக்கவில்லை என்று சிலர் வந்து புகார் தெரிவித்து வேறு துப்பாக்கி கொடுங்கள் என்று சத்தம் போட்டுக்கொண்டு இருந்தனர்.
விலை கொஞ்சம் கூடுதலாகவே பட்டது ஆனால் இது சிவகாசி விலை என்கின்றனர் இங்குள்ள வியாபாரிகள்.
பட்டாசு வெடிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியது என்று தீயனைப்பு துறையினர் பெரிய அளவில் விழிப்புணர்வு விளம்பர பாததைகள் வைத்துள்ளனர்.
பெரியவர்கள் கண்பார்வையிலேயே குழந்தைகள் பட்டாசு வெடிக்கவேண்டும் ,பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடை காலணி போன்றவை அணிய வேண்டும்,வெடிக்காத பட்டாசுகளை திரும்ப வெடிக்கவைக்க முயற்சிக்ககூடாது ,குடிசைப்பகுதியின் பக்கத்தில் இருப்பவர்கள் ராக்கெட் போன்ற பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும் என்பது அதில் சில.
-எல்.முருகராஜ்
Advertisement