கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புடன் கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இதில், கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சர்புதீன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்று, விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் முன்னிலையிலும், காலணி அணிந்தும் வெடிக்க வேண்டும். பட்டாசுகளை மைதானங்கள் மற்றும் சமதளத்தில் வைத்தும், நீண்ட வத்திக்குச்சிகளை கொண்டும் பற்ற வைக்க
வேண்டும்.
குடிசை பகுதி மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பகுதிகளான பெட்ரோல் பங்க், வைக்கோல் போர் போன்ற இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. நைலான், பட்டு துணிகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.