வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி : போலி அடையாள அட்டை மூலம் டில்லியில் வசித்து வந்த சீன பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவர், தேச விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டில்லியின் வடக்கு பகுதியில் டிலா என்ற இடத்தில் திபெத்திய அகதிகளுக்கான காலனி உள்ளது. டில்லி பல்கலை அருகேயுள்ள இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவார்கள். இந்த பகுதியில் புத்த மத துறவி போல் காணப்பட்ட பெண்ணை பிடித்து போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரித்தனர்.
அப்போது அவர், தனது பெயர் டோல்மா லாமா எனக்கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அதேபெயரில் நேபாள குடியுரிமை சான்றிதழ் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு, அவரை வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்திய போது உண்மை அம்பலமானது.

அதில், அந்த பெண் சீனாவை சேர்ந்தவர் என்பதும், கடந்த 2019 சுற்றுலாவில் இந்தியா வந்தது தெரியவந்தது. சீனாவின் ஹைனன் மாகாணத்தை சேர்ந்த கெயி ரூயோ என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தேச விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
Advertisement