ஆன்லைன் காப்பீடு விற்பனை நிறுவனமான பாலிசிபஜாரின் தாய் நிறுவனம் பிபி பின்டெக். இதன் பங்குகள் அதன் அதிகபட்ச உயர்வில் இருந்து 75 சதவீதத்திற்கு மேல் சரிந்து, இதுவரையில்லாத புதிய வீழ்ச்சியை கண்டுள்ளது. அதே போல் சில மாதங்களுக்கு முன் பங்குச்சந்தைக்கு வந்த பொதுத் துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பங்கு விலை 30 சதவீதத்திற்கு மேல் சரிந்துள்ளது.
பிபி பின்டெக் - 73.5% சரிவு
இன்று (அக்., 21) வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிவிலேயே சென்ற பிபி பின்டெக் (PB fintech) பிற்பகல் 2.45 நிலவரப்படி ரூ.374.7 என்ற விலைக்கு வந்திருந்தது. இது நேற்றைய விலையைக் காட்டிலும் 6 சதவீத சரிவு. மேலும் இதுவரை இல்லாத புதிய வீழ்ச்சி. 2008ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பாலிசிபஜார் மற்றும் பைசாபஜார் ஆகிய முக்கிய துணை நிறுவனங்களை கொண்டுள்ளது. பாலிசிபஜார் ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளை ஆன்லைன் மூலம் வழங்குகிறது. பைசாபஜார் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனம்.
![]()
|
இந்நிறுவனத்தில் நாக்குரியின் தாய் நிறுவனமான இன்போஎட்ஜ் பெருமளவிற்கு முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு நவ., 15ல் பிபி பின்டெக் பங்குச்சந்தையில் பட்டியலானது. பட்டியலான சில தினங்களில் 15 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது. இந்நிறுவனத்தின் பிசினஸ் மாடல் முதலீட்டாளர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக இருந்தாலும், நிறுவனம் இன்னும் லாபப் பாதையை நோக்கி நகரவில்லை. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இதன் நஷ்டன் ரூ.204 கோடியாகியுள்ளது. வருவாய் 112% உயர்ந்த போதிலும் நஷ்டம் இரு மடங்காகியது. 2023 செப்டம்பர் காலாண்டில் நிறுவனம் லாபப் பாதைக்கு திரும்பும் என கணிக்கின்றனர்.
ஆனால் உலக பொருளாதார நிலைமைகள் சரியில்லாத காரணத்தால், முதலீட்டாளர்கள் நன்கு லாபம் ஈட்டும் நிறுவனங்களை நோக்கி நகரத் தொடங்கினர். மேலும் அமெரிக்காவில் டிஜிட்டல் நிறுவனங்களை விட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதும் பிபி பின்டெக்கை பாதித்தது. இதற்கிடையே சமீபத்தில் பிபி பின்டெக்கில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு வென்ச்சர் கேபிட்டல் முதலீட்டாளர்களுக்கான லாக் இன் பீரியட் முடிவுக்கு வந்தது.
![]()
|
அவர்கள் வசம் 40 லட்சம் பங்குகள் உள்ளன. இது தவிர ஐபிஓவுக்கு முந்தைய முதலீட்டாளர்கள் வைத்துள்ள 2.8 கோடி பங்குகளுக்கான லாக் இன் காலம் நவ., 15ல் முடிவுக்கு வருகிறது. அவர்களுக்கு தற்போதைய விலைக்கும் குறைவான விலையில் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள். சோமேட்டோ லாக்இன் காலம் முடிந்த போது அவை சரிவைச் சந்தித்தது. அந்த அச்சம் பிபி பின்டெக் மீதும் இருப்பதால் பணத்தை வெளியே எடுக்கின்றனர்.
எல்.ஐ.சி., - 32.7% சரிவு
![]()
|
2022ல் ஆசியப் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் அதிக சந்தை மதிப்பை இழந்த நிறுவனங்களில் எல்.ஐ.சி., இரண்டாம் இடத்தில் உள்ளது. ரூ.6 லட்சம் கோடியாக இருந்த சந்தை மதிப்பு, தற்போது ரூ.3.7 லட்சம் கோடியாக கரைந்துள்ளது.
அரசின் கட்டுப்பாடு இருப்பதால், பொதுத் துறை நிறுவனங்கள் மீது முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டாதது, தனியார் துறையினரின் கடும் போட்டி, டிஜிட்டல் சூழலை மேம்படுத்தாமல் பழைமையான பிசினஸ் மாடல் போன்றவற்றால் அதன் பங்குகள் தடுமாறுகின்றன. காப்பீடு சந்தையை 50% தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள எல்.ஐ.சி., சமகால பிசினஸ் முறைகளை ஏற்றுக்கொண்டால், அது போட்டியாளர்களுக்கு தண்ணி காட்டக்கூடும்.