கொச்சி : ''நாட்டின் போதைப்பொருட்களுக்கான தலைநகரமாக பஞ்சாபுக்கு பதிலாக, கேரளா மாறி வருகிறது,'' என, கேரள கவர்னர் ஆரீப் முகமது கான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னர் ஆரீப் முகமது கானுக்கும், மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
புத்தக வெளியீட்டு விழா
பல்கலைகளுக்கான துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் கவர்னர் ஆரீப் முகமது கான், முதல்வரையும், அமைச்சர்களையும் கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார். இந்நிலையில் கொச்சி யில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கவர்னர் ஆரீப் முகமது கான் பேசியதாவது:
நாட்டின் போதைப் பொருட்களின் தலைநகரமாக பஞ்சாப் இருந்து வருகிறது. ஆனால் தற்போது பஞ்சாபுக்கு பதிலாக கேரளா, போதைப்பொருட்களின் தலைநகராக மாறி வருகிறது. கேரளாவின் வருவாய் ஆதாரமே, மதுவும், லாட்டரியும் தான். 100 சதவீத கல்வியறிவு உள்ள ஒரு மாநிலத்தின் வருவாய் ஆதாரமாக இவை இரண்டும் இருப்பது, அவமானகரமான விஷயம்.
லாட்டரி, மது ஆகியவற்றில் கிடைக்கும் வருவாயே போதும் என மாநில அரசு நினைக்கிறதா என தெரியவில்லை. இந்த மாநிலத்தின் கவர்னர் என்ற முறையில் இதற்காக வெட்கப்படுகிறேன்.

விழிப்புணர்வு
ஏழைகள் தான் லாட்டரியை வாங்குகின்றனர். லாட்டரி சீட்டை விற்று ஏழைகளை கொள்ளையடிக்கின்றனர். எல்லா இடத்திலும் மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. ஆனால் இங்கு மது குடிப்பது ஊக்குவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கவர்னரின் இந்த பேச்சு, கேரளாவில் உள்ள ஆளும் கூட்டணி கட்சிகளிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.