லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் போட்டியில் இருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் பதவியை, போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலையில் ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக முடியும். இதையடுத்து நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக்கை வென்று, முன்னாள் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்றார். ஆனால், அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தின. இதனால், 45 நாட்கள் பதவியில் இருந்த நிலையில், லிஸ் டிரஸ் சமீபத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த வாரத்துக்குள் கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

கட்சியின் 1.70 லட்சம் பிரதிநிதிகள் ஓட்டளிக்க உள்ளனர். இந்தத்தேர்தலில் பெண் எம்.பி.,யான பென்னி மோர்டார்ட், தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார். நேற்று (அக்.,23) ரிஷி சுனாக்கும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். அவருக்கு, கட்சியின், 128 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனக்கு 100க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறி வந்த முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியில் இருந்து விலகுவதாகவும், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கான தோ்தல் போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இதனால் ரிஷி சுனாக் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.