மதுரை: உலகில் அதிகம் வசிக்கும் பெரும்பான்மையினர் கொண்டாடும் தீபாவளி முக்கிய பண்டிகையாகும். ஹிந்துக்கள் வாழும் இந்தியாவில் மட்டுமன்றி இன்று உலகம் முழுதும் ஹிந்துக்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்திய தலைவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு தலைவர்கள் தீபாவளியையொட்டி வாழ்த்து சொல்வதுடன் நின்று கொள்ளாமல் கொண்டாடவும் செய்கின்றனர். ஆனால் திராவிடல் மாடல் ஆட்சி நடப்பதாக கூறும் தமிழகத்தில், அனைவரையும் சமமாக கருத வேண்டிய மாநில அரசு தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை என்பது தனி கதை.
தீபாவளி என்றாலே புத்தாடையும், பட்டாசும் தான். ஒரு தலைமுறைக்கு முன்புவரை, தீபாவளியன்று உறவுகளும், நட்புகளும் ஒன்றுகூடி அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, பட்டாசு கொளுத்தி பண்டிகை கொண்டாடுவர். இந்தாண்டு பட்டாசு சத்தத்தை கேட்க முடியவில்லை.
சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மாசு என காரணம் காட்டி, பட்டாசுகள் வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தொழிலை நம்பி தான் இருக்கிறது. ஆனால் பட்டாசு மீதான கட்டுப் பாடு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, சீன பட்டாசு வரவு போன்ற காரணங்களால் அங்கு தொழில் நலியும் நிலை எழுந்துள்ளது.

அது ஒருபுறமிருக்க மறுபுறம் பட்டாசு வெடிப்பதால் ஒலிமாசு ஏற்படுவதாக சமூக நலன் என்ற போர்வையில் தொடரப்பட்ட வழக்குகள் எதிரொலியாக நீதிமன்றமும் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என நேரக்கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
இதன் மூலம் கொண்டாட்டத்திற்கு தடை வந்து விடுமோ என்ற அச்சம் எழுகிறது. அதுமட்டுமின்றி பட்டாசுகள் வெடிக்கும் பெரும்பான்மையினரான நடுத்தர வர்க்கத்தினர் வாங்கி வெடிக்கும் நிலையில் இல்லை.
இந்தாண்டு சீனிவெடி என சிறுவர்கள் வெடிக்கும் வெடிபாக்கெட் ரூ.50, அணு குண்டு பாக்கெட் ரூ.100, கம்பி மத்தாப்பு பெட்டி ரூ.100, சங்குசக்கரம் ஒரு பாக்கெட் ரூ.100 என விற்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் வரை இவற்றின் விலை ரூ.50 க்குள்ளாகவே இருந்தது.
பட்டாசு வெடிப்பதால் ஒலிமாசு ஏற்படுவதை போன்று குழாய் வடிவ ஒலி பெருக்கிகளால் ஒலி மாசு ஏற்படுவதாக கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டது. இன்று காதணி முதல் கல்யாண விழாக்களில் குழாய் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மேலும் விமானங்கள் பறக்கும் போது எழும் ஒலியை விட பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு குறைவே. ஒலிமாசு என்பதற்காக விமானங்கள் பறப்பதை தடுக்க முடியுமா. வாகன பெருக்கத்தால் தலை நகர் டில்லியில் காற்று மாசு நிலவுகிறது.
அதே நேரம் வாகனங்கள் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. பட்டாசு வெடிப்பதற்கான விலை கட்டுப்பாடுகள், உயர்வு உள்ளிட்ட காரணங்களால் எதிர்காலத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தடை செய்து விடுமோ என்ற ஐயம் பண்டிகை கொண்டாடியவர்கள் மனதில் எழுந்தது.