நாட்டின் பழமையான கட்சி, சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி என்ற பெருமையுடைய, 137 ஆண்டு கால வரலாறு உடைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல், இம்மாதம் 17ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில், 24 ஆண்டுகளுக்கு பின், சோனியா குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை.
அதேநேரத்தில், சோனியா மற்றும் ராகுலின் மறைமுக ஆதரவுடன், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த காங்., மூத்த தலைவரான, 80 வயதான மல்லிகார்ஜுன கார்கேயும், அவரை எதிர்த்து, கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருவனந்தபுரம் எம்.பி.,யான சசி தரூரும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே, அமோக வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் வாயிலாக, நேரு - இந்திரா குடும்பத்தைச் சாராத தலைவர் என்ற புதிய சாதனையை மல்லிகார்ஜுன கார்கே படைத்திருக்கிறார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜெகஜீவன்ராம், 1970 - 71 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைவராக இருந்தார். 50 ஆண்டுகளுக்கு பின், தலித் சமூகத்தின் கார்கே, அந்தப் பதவிக்கு வந்துள்ளார்.
தென் மாநிலங்களில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ், 1992 - 96 காலகட்டத்தில், காங்., தலைவராக இருந்தார். அதன்பின், 30 ஆண்டுகள் கழித்து கர்நாடகாவைச் சேர்ந்தவர் தலைவராகி உள்ளார்.
இந்தத் தேர்தலில் பல முறைகேடுகள் அரங்கேறியதாகவும், குறிப்பாக, உ.பி., மாநிலத்தில் அதிக அளவில் முறைகேடுகள் நடந்ததாகவும், சுதந்திரமான, நேர்மையான தேர்தலை, காங்., கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம் நடத்தவில்லை என்றும், சசி தரூர் தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டும், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதன் வாயிலாக, கண்துடைப்புக்காகவே, இந்த தலைவர் தேர்தல் நடத்தப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. அதே நேரத்தில், 'சோனியா குடும்பத்தினரின் ஆலோசனையை, ஆதரவை கேட்க தயங்க மாட்டேன்' என, கார்கே ஏற்கனவே கூறியுள்ளார்.
அதனால், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சியின் தலைவராகி இருந்தாலும், அவரின் மூக்கணாங்கயிறு சோனியா குடும்பம் வசமே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களின் ஆதிக்கம் கட்சியில் தொடரும் என்றும் திட்டவட்டமாக சொல்லலாம். கோஷ்டி பூசல்களுக்கு பெயர் பெற்றது காங்., கட்சி. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளமான கோஷ்டிகள் உள்ளன. அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து, அனைவரையும் கார்கே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். அந்த கோஷ்டி தலைவர்கள், இவரை உண்மையான தலைவராக ஏற்றுக் கொள்வரா அல்லது பொம்மை தலைவராகவே நினைப்பரா என்பதும் கேள்விக்குரியதே.
இந்த ஆண்டு இறுதியில், குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலங்களில், தற்போது, பா.ஜ., தான் ஆட்சியில் உள்ளது. பா.ஜ.,வுக்கு பலமான போட்டியை உருவாக்கி, வெற்றியை ருசிக்க வேண்டிய பொறுப்பும் கார்கேவுக்கு உள்ளது.
அத்துடன், 2024ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான ஆயத்த பணிகளையும் முடுக்கி விட வேண்டும். மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.,வுக்கு எதிராக, மாநில கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து, பலமான கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார். அதே நேரத்தில், காங்கிரஸ் தலைமையில் தான் அந்த கூட்டணி அமைய வேண்டும் என்பதும் அவரின் விருப்பம்.
அவரின் முயற்சிக்கு கார்கே ஒத்துழைப்பு தந்து, காங்கிரஸ் தலைமையில் பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே, பா.ஜ.,வுக்கு சரியான போட்டியை உருவாக்க முடியும். இல்லையெனில், காங்கிரஸ் மட்டும் தனித்து நின்று, வெற்றி பெறுவது கடினமே. 2024 லோக்சபா தேர்தலில், காங்., கட்சிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கினால், அது கார்கேவுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இல்லையெனில், பழியை சுமக்க நேரிடும். மொத்தத்தில் படு பாதாளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியை, தன் திறமையான செயல் திட்டங்களால் கார்கே துாக்கி நிறுத்துவாரா, அக்கட்சி பழைய நிலைக்கு மீளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.