புதுடில்லி: சவுதியின் பட்டத்து இளவரசரும், சமீபத்தில் பிரதமராக நியமிக்கப்பட்டவருமான முகமது பின் சல்மானின் இந்திய வருகையின் போது, முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவை முக்கிய திட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடக்கும் ஜி 20 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க முகமது பின் சல்மான் செல்லும் வழியில் ஒரு நாள் பயணமாக வரும் 14 ம் தேதி டில்லி வருகிறார். அங்கு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை, முகமது பின் சல்மான் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

சவுதி பிரதமரின் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக முதலீடு மற்றும் வர்த்தகம் ஆகியவை இருக்கும் எனவும், அது குறித்து இரு நாட்டு தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடக்கும் எனவும் டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிதியாண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 43 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இந்திய காலணிகள் மற்றும் ஜவுளி ஆகியவற்றின் முக்கிய சந்தையாக சவுதி உள்ள நிலையில், இன்னும் அதிகம் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை இந்தியா எதிர்பார்க்கிறது. அதேபோல், இந்தியாவின் பெட்ரோ கெமிக்கல் துறையில் தனது எல்லையை விரிவுபடுத்த முடியும் சவுதி நம்புகிறது.