வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்வர் வீட்டில் 75 கிலோ வெடிமருந்துக்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவையில் நிருபர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் கூறியதாவது: கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக தடயவியல் துறை, கைரேகை துறையினரை வரவழைத்து அறிவியல் பூர்வ புலன் விசாரணை நடத்தப்பட்டது. இறந்த நபரை 12 மணி நேரத்தில் அடையாளம் கண்டுபிடித்தோம். வாகனம் 10 நபர்களை தாண்டி வந்த நிலையிலும் விரைவாக உரிமையாளர் கண்டுபிடிக்கப்பட்டார். இறந்த போன நபரை கண்டுபிடித்து, அவரின் வீட்டில், நீதிமன்றம் அனுமதி பெற்று சோதனை நடத்தப்பட்டது. அதில்ந பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவை நீதிமன்றத்திற்கு அனப்பி வைத்துள்ளோம்.
சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர் வீரபாண்டி தலைமையில் விசாரணை நடந்து வருகிறது 9 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் களத்தில் விசாரிக்கின்றன இதுவரை 22 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். புலன் விசாரணை அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடம் அருகே போலீஸ் செக்போஸ்ட் இருந்ததால், அந்த வாகனம் மேற்கொண்டு செல்லாமல் அங்கேயே வெடித்திருக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த உடன், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுச்சதியில் வேறு யார் சம்பந்தப்பட்டு உள்ளனர். யார் யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரில் மூன்று பேர் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து வெளிபொருட்களை வெளியே எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சியில் இருந்த நபர்கள். ஜமேஷா முபின் வீட்டில் இருந்து 2 எல்பிஜி சிலிண்டர்கள் 3 டிரம் எடுத்து சென்றனர். அதில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது குறித்து தடயவியல் சோதனைக்கு அனுப்பி உள்ளோம். முபின் வீட்டில் இருந்து கைதானவர்களில் ரியாஸ், நவாஸ், பெரோஸ் ஆகியோர் தெரிந்தே வெடிக்கக்கூடிய பொருட்களை எடுத்து சென்றனர். ஒருவர் ஒருங்கிணைத்துள்ளார். மற்றொருவர் வாகனம் ஏற்பாடு செய்துள்ளார். முபின் வீட்டில் நடந்த சோதனையில் பொட்டாஷியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர் என 75 கிலோ வெடிபொருட்கள் இருந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரில் ஒருவரான முகமது தல்ஹா என்பவர், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட அல் உம்மா தலைவர் பாஷாவின் உறவினர். கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே 2019 தேசிய புலனாய்வு முகமை என் ஐ ஏ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். சிலர் கேரளாவிற்கு சென்று வந்துள்ளனர். அவர்கள் எதற்காக, எப்போது சென்றவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முழு விபரம் கிடைத்த உடன் தகவல் தெரிவிக்கப்படும். சம்பவ இடத்திலும் சுற்றுவட்டாரத்திலும் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் பற்றிய விபரம் உடனடியாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ தானாக முன்வந்து விசாரிக்கவும் வாய்ப்புள்ளது அவ்வாறு முன் வரும் பட்சத்தில் புதிதாக என் ஏ எஸ் சார்பில் வழக்கு பதிவு செய்யப்படும்