திருவனந்தபுரம்: மற்ற மாநிலத்தவர்கள் குறித்து கேரள நிதியமைச்சர் பால கோபால் தெரிவித்த கருத்து தேச துரோகம். எனவே அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜயனுக்கு, கவர்னர் ஆரிப் கான் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளாவில், கவர்னர் ஆரீப் முகமது கானுக்கும், முதல்வர் பினராயி விஜயனுக்கும் இடையே துணை வேந்தர் நியமன விவகாரத்தில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கேரளாவில் உள்ள ஒன்பது பல்கலைகளைச் சேர்ந்த துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என, கவர்னர் ஆரீப் முகமது கான், உத்தரவிட்டிருந்தார். கவர்னரின் உத்தரவை ஏற்க துணைவேந்தர்கள் மறுத்துவிட்டனர். துணைவேந்தர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் துணைவேந்தர்கள் பதவியில் தொடரலாம் என உத்தரவிட்டது.

இது தொடர்பாக கேரள நிதியமைச்சர் கேஎன் பாலகோபால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் உ.பி., போன்ற இடங்களில் இருந்து வந்தவர்கள், கேரளாவில் உள்ள பல்கலைகழகங்களை புரிந்து கொள்வது கடினம் எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயனுக்கு கவர்னர் ஆரிப்கான் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: பாலகோபாலின் கருத்துகள், கேரளாவிற்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இடையே பிளவை உருவாக்கி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு உயர்கல்வி முறையில் இருப்பது போல் ஒரு தவறான எண்ணத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. கல்வி அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் என்னை விமர்சித்தனர். அது என்னை பாதிக்காததால், அதனை நான் புறக்கணித்தேன். ஆனால், பாலகோபாலின் தேச துரோக கருத்துகளை நான் கண்டுகொள்ளவில்லை என்றால், அது எனது கடமையை மிகக்கடுமையாக புறக்கணித்தது ஆகிவிடும். நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்து, அரசியலமைப்பு சட்டப்படி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் கூறியுள்ளார்.