வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தீபாவளி திருநாளில், கோவை நகரில் ஐந்து முக்கிய பகுதிகளை வெடிகுண்டு வைத்து தகர்க்க, பயங்கர சதித்திட்டம் தீட்டப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறி வைத்ததும் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து, ஆற அமர யோசித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து, இந்த சம்பவம்தொடர்பான விசாரணையை, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., வசம் ஒப்படைக்க,முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார்.
கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 23ம் தேதி, காரில் காஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில், ஜமேஷா முபின், 29, உயிரிழந்தார். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான, 75 கிலோ ரசாயன பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தற்போது 'பாக்கெட் டைரி' ஒன்றும் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதில், சங்கேத குறியீடுகள் எழுதப்பட்டு உள்ளன.
ஐந்து இடங்கள்
கோவையின் முக்கிய சுற்றுலா தலங்கள் என்ற தலைப்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கமிஷனர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், ரேஸ் கோர்ஸ், விக்டோரியா ஹால் என்ற, ஐந்து இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த ஐந்து இடங்களும், சுற்றுலா மையங்கள் கிடையாது. அவை, பொது மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லக்கூடிய இடங்கள்.
எனவே, குண்டு வைப்பதற்காக ஜமேஷா தலைமையிலான கும்பல் தேர்வு செய்த இடங்களின் பட்டியலாக அது இருக்கக் கூடும் என, விசாரணை குழுவினர் சந்தேகிக்கின்றனர்.
பொறியியல் பட்டதாரியான முபின், அதற்கேற்ற வேலையை தேடிக் கொள்ளாமல், பழைய புத்தகம் விற்று வந்துள்ளார். சாலையோரம் கடை போட்டு, சட்டை, துணி வியாபாரம் செய்துள்ளார்.ஆனாலும், அவரிடம் பணம் ஏராளமாக புழங்கியுள்ளது. அவருக்கு யார் யாரிடம் இருந்து பணம் வந்துள்ளது; சமூக வலைதளம், இ - மெயில் வாயிலாக யாருடன் எல்லாம் தொடர்பு வைத்திருந்தார் என்ற விபரங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.
இதனடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரவு
இதற்கிடையில், இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்கு பின், உள்துறை, உளவுத் துறை மற்றும் போலீஸ் உயரதிகாரிகளை அழைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக நடந்து வரும் விசாரணை குறித்தும், பொதுவான சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்தும், விரிவான ஆய்வுக் கூட்டம் நடந்தது.தலைமைச் செயலர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, உளவுத் துறை கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விசாரணை, கோவை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துவிவாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் தற்போதைய நிலையை கேட்டறிந்த முதல்வர், கோவை மாவட்டத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது போன்ற சம்பவங்களின் விசாரணையில், மாநிலம் தாண்டிய பரிணாமங்களும், பன்னாட்டுத் தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால், இவ்வழக்கின் விசாரணையை, தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற, மத்திய அரசுக்கு உரிய பரிந்துரைகள் செய்ய, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சில உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்தார்.
அதன் விபரம்:
* கோவை மாநகர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று பகுதிகளில், புதிய காவல் நிலையங்களை, உடனடியாக அமைக்க வேண்டும்
* மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள், சம்பவங்கள், வருங்காலங்களில் நடக்காமல் தடுக்க, காவல் துறையில் ஒரு சிறப்புப் படையை உருவாக்க வேண்டும்
* கோவை உட்பட முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய முக்கியப் பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்பு கேமராக்களை, விரைவில் பொருத்த வேண்டும்
* மாநில உளவுப் பிரிவில், கூடுதல் காவல் அலுவலர்களை நியமிக்க வேண்டும்
* இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்தும், அவர்களோடு தொடர்பு வைத்திருப்போர் குறித்தும், நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு, தகுந்த பாதுகாப்பை வழங்கி, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை, என்.ஐ.ஏ., குழுவினர் நேற்று துவங்கினர். இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.,வுக்கு மாற்ற வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.அதைத் தொடர்ந்து, தமிழக அரசும் நேற்று காலை பரிந்துரை செய்தது. இந்நிலையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவே கோவை வந்தனர்.டி.ஐ.ஜி., வந்தனா,எஸ்.பி., ஸ்ரீஜித் தலைமையில் வந்த என்.ஐ.ஏ., குழுவினர், வழக்கை விசாரித்து வரும் மாநில போலீஸ் அதிகாரிகளிடம் விபரங்களை பெற்றுக் கொண்டனர்.
இதற்கிடையே, இவ்வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார், கோவையில் வெவ்வேறு இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். ஜமேஷா முபின் உறவினர், நண்பர்களின் வீடுகள் கண்டறியப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.கோட்டைமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஜமேஷா முபின் உறவினர் அப்சல் என்பவர் வீடு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டது; 'லேப் டாப், கம்ப்யூட்டர்' பறிமுதல் செய்யப்பட்டன.வின்சென்ட் ரோடு பகுதியில், சாலையில் கேட்பாரின்றி நிறுத்தப்பட்டிருந்த ஐந்து கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் உரிமையாளர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மற்றும் பா.ஜ., கட்சியினர், கோட்டை ஈஸ்வரன் கோவிலில், நேற்று விளக்கேற்றி வழிபட்டனர்.
கோவைக்கு வந்த ஆபத்தை தடுத்து, மக்களை காத்தருளிய ஈஸ்வரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி தலைமையில் அக்கட்சியினர், விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.
பின், வானதி கூறியதாவது:ஒரு பயங்கரவாத தாக்குதல் நடப்பதன் ஆரம்ப கட்ட முயற்சி, இறைவன் கருணையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோட்டை சங்கமேஸ்வரர் பல நுாற்றாண்டுகளாக கோவையை காத்துக் கொண்டிருக்கிறார். மக்களை கொல்வதற்கான சதி, அவரது கோவில் வாயிலில் முறியடிக்கப்பட்டுள்ளது. இதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வதற்காக பிரார்த்தனை நடந்தது.சாதாரண குற்றச் செயல்களுக்கு கூட, நேரில் சென்று பார்ப்பதும், விளக்கம் அளிப்பதுமாக இருக்கும் தமிழக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் கூட, இப்போது கோவை வரவில்லை.
முதல்வர் நேரில் வந்து பார்க்காதது மட்டுமல்ல; எதுவும் கூறாமல் இருப்பதும் கண்டனத்துக்கு உரியது. முதல்வர், கோவையை இன்னும் மனதுக்குள் பழிவாங்கும் எண்ணத்துடன் தான் நடத்துகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.உளவுத்துறை முற்றிலும் செயல் இழந்திருக்கிறது என்பதை, இந்த சம்பவம் காட்டுகிறது. இது ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவம் கிடையாது. இந்த விஷயத்தில், முதல்வர் கவுரவம் பார்க்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மாநகர மக்களை, கடவுள் காப்பாற்றி விட்டார். அதே கடவுள், பயங்கரவாதியை கொன்று விட்டார். எங்களது வருத்தம், போலீஸ் உளவுப் பிரிவினர் அவர்களை கண்காணிக்க தவறி விட்டனர் என்பது தான்,'' என, ஐக்கிய ஜமாத் பொதுச்செயலர் ஜப்பார் தெரிவித்தார்.
கோவை ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
பின், ஐக்கிய ஜமாத் பொதுச் செயலர் ஜப்பார் கூறியதாவது: பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்ப்பதே, எங்கள் அமைப்பின் நோக்கம். நாங்கள் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கோவை மாநகர மக்களை, கடவுள் காப்பாற்றி விட்டார். அதே கடவுள், பயங்கரவாதியை கொன்று விட்டார். பயங்கரவாதிகளின் எண்ணப்படி சம்பவம் நடந்திருந்தால், கோவை மீண்டும் அதல பாதாளம் சென்றிருக்கும்.எங்கள் கருத்துப்படி, அவர்கள் ஒரு சிறிய கூட்டம். அவர்கள் மீது போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது வருத்தம், போலீஸ் உளவுப்பிரிவினர் அவர்களை கண்காணிக்க தவறி விட்டனர் என்பது தான்.
கடந்த காலங்களில் யாரெல்லாம் உளவுப்பிரிவில் பணியாற்றினரோ, ஜமாத்துகளுடன் தொடர்பில் இருந்தனரோ, அவர்களை மீண்டும் அதே இடத்தில் நியமிக்க வேண்டும்; உளவுத் துறையை பலப்படுத்த வேண்டும்.செல்வபுரம், போத்தனுார், கடை வீதி, உக்கடம், குனியமுத்துார் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களை பலப்படுத்த வேண்டும். அரசியல் சார்பின்றி, திறமையானவர்களை நியமிக்க வேண்டும்.தவறு செய்பவர்கள் பயங்கரவாதி என்றால் பச்சாதாபம் காட்டக் கூடாது. அவர்கள் மீது தமிழக அரசும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜப்பார் தெரிவித்தார்.ஐக்கிய ஜமாத் தலைவர் பஷீர் அகமது மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், சமூக வலைதளத்தில், முபினுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டு இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரது வீட்டிலும் சோதனையிட்டனர். இவர் மீது வழக்கு ஏதும் இல்லை. ஜமேஷா முபினுக்கும், இவருக்கும் தொடர்பு இல்லை என, தெரிய வந்துள்ளதாக, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்தார்.
- நமது நிருபர் -