புதுடில்லி,:''நம் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த, லட்சுமி, விநாயகர் படங்களுடன் கூடிய ரூபாய் நோட்டுகளை அச்சிட வேண்டும்,'' என, புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு யோசனை வழங்கியுள்ளார்.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இவர் நேற்று கூறியதாவது:நம் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.
இதை மேம்படுத்த நான் பல்வேறு யோசனைகளை ஏற்கனவே கூறிஉள்ளேன். கடவுள்களின் ஆசி நமக்கு தேவை. தற்போது ரூபாய் நோட்டுகளில் மஹாத்மா காந்தியின் உருவம் உள்ளது.
இதைத் தவிர, செல்வக் கொழிப்பை வழங்கும் லட்சுமி, தடைகளை நீக்கும் விநாயகரின் உருவங்களும் ரூபாய் நோட்டில் இடம்பெற வேண்டும்.
ஏற்கனவே உள்ள நோட்டுகளில் மாற்றம் செய்ய வேண்டாம். இனி அடுத்து அச்சிடும் நோட்டுகளில், லட்சுமி அல்லது விநாயகரின் உருவமும் இடம்பெற வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதிஉள்ளேன்.
ஆசிய நாடான, முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இந்தோனேஷியாவில், அந்த நாட்டின் கரன்சியில், விநாயகர் உருவம் உள்ளது. இதை ஏன் நம் நாட்டில் செய்ய முடியாது?
நம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பெற செய்வதற்கு, கடவுளின் ஆசி கிடைப்பதற்கு, இந்த முயற்சியை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.''ஹிந்துக்கள், ஹிந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் ஆம் ஆத்மி கட்சியினர் பேசிஉள்ளனர்.
''ஆனால், தற்போது தேர்தலுக்காக கெஜ்ரிவால் புதிய முகமூடியை அணிய முயற்சிக்கிறார்,'' என, புதுடில்லி பா.ஜ., தலைவர் மனோஜ் திவாரி குறிப்பிட்டுள்ளார்.
''அயோத்தி ராமர் கோவிலுக்கு போக மறுத்தவர், தற்போது அரசியலுக்காக தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்கிறார்,'' என, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார்.