நோயறியும் இருக்கை!
நோய் வரும் முன் காக்கவும் சிறுநீர் சோதனை செய்யலாம். அதைத்தான் செய்கிறது, இஸ்ரேலைச் சேர்ந்த ஆலிவ் டயக்னாஸ்டிக்சின் நவீன கழிவு இருக்கை. இதிலுள்ள ஸ்பெக்ட்ரோமீட்டர் எனப்படும் அலைக்கற்றை மானியும், சில உணரிகளும், ஒருவர் கழிக்கும்போதே சிறுநீர்த் தாரை மீது ஒளியைப் படச் செய்து, புரதங்கள், நைட்ரேட்கள், போன்றவற்றின் அடர்த்தி, நிறம், வெளியேற்றப்படும் அழுத்தம், போன்றவற்றை அளந்து செயற்கை நுண்ணறிவு செயலிக்கு அனுப்பிவிடுகிறது.
இதுதான் செயற்கை நுண்ணறிவும், அலைக்கற்றைமானியும் உள்ள உலகின் முதல் கழிவு இருக்கை.
உடனடி மின்னேற்றம்!
வண்டியில் பெட்ரோல் நிரப்பும் அதே நேரத்திற்குள், மின்வாகனத்தை மின்னேற்றம் செய்யமுடியுமா? வெறும் 10 நிமிடங்களில் முடியும் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
வேகமாக மின்ஏற்றம் செய்கையில், மின்கலன் வேகமாக சூடாகவும் செய்யும். இதைத் தவிர்க்க, மின்கலனின் நேர் மற்றும் எதிர் மின்முனைகளுக்கு இடையே உள்ள தகடுகளுடன், நிக்கல் உலோகக் காகிதங்களையும் வைத்தால், அது சூடேறாது. இதனால், மின்வாகனத்தை, 10 நிமிடங்களில் மின்னேற்றம் செய்யலாம்.
மூளையைப் படிக்க ஒரு கருவி
மேசை அளவு இருந்த 'இரண்டு போட்டான் ஒளிர்வு' நுண்ணோக்கியை 2.4 கிராம் உள்ள குட்டி நுண்ணோக்கியாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள். 'நேச்சர்' இதழில் இந்த கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது.
மினி2பி (Mini2P) என்ற இந்த நுண்ணோக்கி, இரண்டு போட்டான்களின் ஒளிர்வினால், மூளையிலுள்ள நியூரான்களை, லென்சுகள் வழியே பார்க்க உதவுகிறது. ஒரு குரங்கின் தலைமேல் பொறுத்தி, மூளைக்குள் ஊடுருவும் லென்சுகளை வைத்து, மூளை செல்கள் இயங்குவதை நிகழ்நேரத்தில் இது காட்டும்.
வளைக்கும் கரங்கள்
கடலில் ஜெல்லி மீன், பல கரங்களால் இரையைப் பிடிக்கிறது. அதே போல ஒரு ரோபோவின் கரத்தை ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் உருவாக்கியுள்ளனர். எந்த வடிவில் உள்ள பொருளையும் சுற்றிப் பிடித்துக்கொள்கிறது அக்கரம்.
அதில் உணரிகளோ, கணினி அனுப்பும் கட்டளைகளை உணர்ந்து இயங்கும் விரல்களோ இல்லை, மாறாக, வெறும் அழுத்தத்தின் மூலமே, ரோபோவின் ஜெல்லி விரல்களை ஊதிப் பெரிதாக்கி பொருட்களை பற்றவும்., அழுத்தத்தை நீக்கி பொருட்களை விட வைக்கவும் முடிகிறது.
கனம் பொருந்திய நட்சத்திரம்
விண்வெளியில் 'நியூட்ரான்' நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவது புதிதல்ல. ஆனால், அண்மையில் 'நேச்சர் அஸ்ட்ரானமி' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, விஞ்ஞானிகள், மிக இலகுவான நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
நம் சூரியனைவிட பல மடங்கு பெரிய நட்சத்திரம் வெடித்துச் சிதறி, அதன் மையக் கரு சுருங்கி, நியூட்ரான் நட்சத்திரமாக மாறியுள்ளது. அதன் அகலம் 12 மைல்.
சூரியனின் எடையில், 0.7 அளவு உள்ளது. இது 'விநோதமான' நியூட்ரான் நட்சத்திரம் என்கிறது அக்கட்டுரை.