ஸ்பேஸ் எக்ஸ் அதிபர் எலான் மஸ்க், மனித மூளைத் திறனைப் பெருக்கும் நியூராலிங்க் என்ற சில்லினை உருவாக்கி வருகிறார். நியூராலிங்க், அக்டோபரில் ஒரு 'காண்பி & சொல்' நிகழ்ச்சியை நடத்தவிருந்தது. ஆனால், அதை மஸ்க், நவம்பருக்கு தள்ளி வைத்திருக்கிறார்.
இதனால், மிகப் பெரிய நியூராலிங்க் அறிவிப்பு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மனித மூளைக்கும் கணினிக்கும் இடைமுகமாக நியூராலிங்க் என்ற ஒரு சில்லு செயல்படும். மனித மூளைக்குள் இதைப் பொருத்தவேண்டும் என்பதுதான் சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால், ஏற்கனவே ஒரு குரங்கு மற்றும் பன்றியின் மூளையில் நியூராலிங்க் சில்லுகளை வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர்.
அல்சைமர்ஸ் போன்ற நரம்பு பாதிக்கப்பட்டோர், விபத்தில் அங்கக் கட்டுப்பாடுகளை இழந்தோர் போன்றோருக்கு நியூராலிங்க் சில்லு உதவும் என்கிறார் மஸ்க்.
ஆனால், மனித மூளைக்கும் கட்டற்ற வளர்ச்சி அடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு கணினிக்கும் இடை முகமாகவே நியூராலிங்க் சில்லு இருக்கும் என்று மஸ்க் சொல்கிறார். அதாவது, செயற்கை நுண்ணறிவு எல்லை மீறிப் போகாமல் இருக்க, நியூராலிங்க் சில்லைப் பொருத்திய மனிதர்கள் கடிவாளம் போடுவார்கள் என மஸ்க் நம்புகிறார்.