வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கை தமிழக அரசு என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைத்தது மிகத் தவறான முடிவு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை அருகே வாகனத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) ஒப்படைத்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிகத்தவறான நிர்வாக முடிவாகும்.
இந்த முகமையானது பா.ஜ.,வின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இஸ்லாமிய மக்களை குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநில தன்னாட்சி என முழங்குகிற திமுக அரசு, என்.ஐ.ஏ., வசம் இவ்வழக்கை ஒப்படைத்திருப்பது ஏற்க முடியாது.
வன்முறை செயலில் ஈடுபட்டு, சமூக அமைதியை குலைக்க முனைவோர் எவராயினும் அவர்களை சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
அதேசமயம், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலேயே, அச்சமூகத்தினரையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கென்பது மிக ஆபத்தானது. விசாரணை முடியும் முன்பே, இந்நிகழ்வுக்கு மதச்சாயம் பூசுவது அப்பட்டமான மதக் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.

விசாரணை முடியும் முன்பே, வழக்கை அவசர அவசரமாக என்.ஐ.ஏ.,வுக்கு மாற்ற வேண்டிய அவசியமென்ன வந்தது? துப்பறிந்து விசாரணை செய்வதில் பெயர்பெற்ற தமிழக போலீஸிடம் உள்ள வழக்கை ஒப்படைப்பதன் மூலம் தனது இயலாமையை ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது போலீசின் மீது முதல்வர் நம்பிக்கையை இழந்துவிட்டாரா?
இவ்வழக்கில் அப்பாவி இஸ்லாமியர்களும் கைது செய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? தனது பொறுப்பை தட்டிக்கழிக்க, என்.ஐ.ஏ.,வுக்கு வாசல்திறந்து விடுவதுதான் மாநில தன்னாட்சியை கட்டிக்காக்கிற லட்சணமா முதல்வரே? வெட்கக்கேடு. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.