வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கன்னிவாடி: காந்திகிராம பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கலாம் என கூறப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம பல்கலை மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்குகி வருகிறது. இங்கு 2019 செப். 13ல் 35-வது பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போதைய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிசாந்த் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் கொரோனா பாதிப்பால், 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடக்கவில்லை.வரும் நவ. 11ல், பல்கலையின் 36-வது பட்டமளிப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பல்கலை நிர்வாகம் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், பாஸ்கரன் எஸ்.பி., ஆகியோர் இன்று காந்திகிராம பல்கலையில் ஆய்வுக்காக வந்தனர். விழா நடைபெறும் பல்கலை பல்நோக்கு அரங்கம், காந்திகிராம சுகாதாரம் குடும்ப நல அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ஹெலிபேடு (ஹெலிகாப்டர் இறங்கு தளம்), அரங்கிற்கு வரும் மாணவர்கள், பார்வையாளர்களுக்கான வழித்தடம், ரயில்வே சப்-வே(சுரங்கப்பாதை) வழித்தட பகுதிகளை பார்வையிட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, பல்கலை பதிவாளர் சிவக்குமார், போலீஸ், வருவாய்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.