சின்னாளபட்டி--திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்திகிராமபல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கலாம் என தகவல்வெளியான நிலையில் இங்குள்ள ஹெலிபேடு தளத்திலிருந்து பிரத்யேக பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் விசாகன், பாஸ்கரன் எஸ்.பி., ஆய்வு செய்தனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காந்திகிராம பல்கலையில் 2019 செப். 13ல் பட்டமளிப்பு விழா நடந்தது. பின் கொரோனாவால் 3 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடக்கவில்லை.
இதையடுத்து 36வது பட்டமளிப்பு விழா நவ., 11ல் நடத்த பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுஉள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இத்தகவலை பல்கலை நிர்வாகம் சார்பில் உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும் கலெக்டர்விசாகன், பாஸ்கரன் எஸ்.பி., இங்கு ஆய்வு செய்தனர். பல்கலை பல்நோக்கு அரங்கம், காந்திகிராம சுகாதார அறக்கட்டளை வளாகத்திலுள்ள ஹெலிபேடு, அரங்கிற்கு வரும் மாணவர்களுக்கான வழித்தடம், ரயில்வே சப்வே (சுரங்க பாதை) ஆகியவற்றை பார்வையிட்டனர்.
மேலும் போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ், வருவாய்த்துறையினருடன் பல்கலை பதிவாளர் சிவக்குமார் பங்கேற்ற ஆலோசனை கூட்டமும் நடந்துள்ளது. பிரதமர் வருகையால் ஹெலிபேடு தளத்தில் இருந்து தனி பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement