சத்தியமங்கலம்,-தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணி அடித்து வினோத திருவிழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி, கும்டாபுரத்தில், பழமையான பீரேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு வினோத திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
அதற்காக மாடு வளர்ப்பவர்கள், அவரவர் வீடுகளில் இருந்து பசு சாணத்தை கொண்டு வந்து கோவில் அருகே குவித்திருந்தனர். காலை, ஊர் குளத்தில் இருந்து கழுதை மேல் உற்சவர் சுவாமி சிலையை வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
தொடர்ந்து மூலவர், உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பின், ஆண்கள், சிறுவர்கள் மேலாடை அணியாமல், ஒருவர் மீது ஒருவர் சாணத்தை உருட்டி வீசி மகிழ்ந்து கொண்டாடினர்; பெண்கள் பார்த்து கை தட்டி ரசித்தனர். இந்த வினோத சடங்கு ஒரு மணி நேரம் நடந்தது. தொடர்ந்து அனைவரும் ஊர் குளத்துக்கு சென்று நீராடி வீட்டுக்கு சென்றனர்.
பின், உடைகளை மாற்றி மீண்டும் கோவிலுக்கு வந்து, அங்கிருந்த சாணியை எடுத்துச்சென்று தங்கள் விளைநிலங்களில் வீசினர்.
இப்படி செய்தால் அந்த ஆண்டு பயிர்களை நோய் தாக்காமல் செழிப்பாக வளரும் என்பது அவர்களின் நம்பிக்கை.