சென்னை: கிராம சபையை போன்று தமிழகத்தில் முதன்முறையாக நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்கள் நவ.,1ம் தேதி நடைபெற உள்ளன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாள் (ஜனவரி 26), தொழிலாளர் நாள் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்டு 15) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு நாட்களின் போது, அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டப்படுகிறது. இதில் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த பொதுமக்களுடைய கோரிக்கைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசினுடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இந்த நிலையில், கிராம சபை கூட்டங்களை போன்று இனி தமிழகத்தில் முதன்முறையாக நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டங்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுடைய குறைகளை கேட்டு அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில், இந்த நகர, மாநகர சபை கூட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மல் 6வது வார்டில் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் மாநகர சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று மக்கள் குறைகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement