வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'பிரதமர் மோடி எப்படி வாயால் வடை சுடுவாரோ, அதேபோல பா.ஜ.,வினர் அனைவரும் வாயால் வடை சுடுவதாக' திமுக எம்எல்ஏ உதயநிதி பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் அக்கட்சி இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ.,வுமான உதயநிதி பங்கேற்று பேசியதாவது: மழைக்காலம் என்பதால் நிகழ்ச்சியை உள் அரங்கில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், அமைச்சர் சேகர்பாபு நினைத்தால் மழையை கூட நிறுத்திவிடுகிறார். ஏனெனில் அவர் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனாலும் சொல்கிறேன். மழை பெய்தால் ஒரு இடத்திலும், இல்லையென்றால் இன்னொரு இடத்திலும் நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒரு கேள்வி கேட்டால், அவர் அளிக்கும் பதில்கள் யாராக இருந்தாலும் அசரடித்துவிடும். சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதே என கேட்டதற்கு, எதிர்மறையாக பார்க்காமல், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதாக நேர்மறையாக பாருங்கள் என பதிலளித்தார். எப்படிப்பட்ட மத்திய நிதியமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார் பாருங்கள்.
பிரதமர் மோடி எப்படி வாயால் வடை சுடுவாரோ, அதேபோல பா.ஜ.,வினர் அனைவரும் வாயால் வடை சுடுகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. ஆனால் 95 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டதாக பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறுகிறார். அந்த அளவிற்கு பா.ஜ., அரசு தமிழகத்தை வஞ்சித்து கேவலமான அரசியல் செய்து வருகிறது.