மாருதி சுசூகி இந்தியாவின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டின் லாபம் கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தைக் காட்டிலும் 334% உயர்ந்து ரூ.2061.5 கோடியாக அதிகரித்துள்ளது. இத்தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியானவுடன் மாருதி சுசூகி பங்குகள் 2 மணிக்கு பின்னர் 5 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியது.
ஆட்டோமொபைல் துறைக்கு கடந்த ஆண்டு கஷ்ட காலமாக சென்றது. மூலப் பொருட்கள் விலை உயர்வு, சிப் தட்டுப்பாடு ஆகியவற்றால் உற்பத்தி பாதிக்கப்பட்டு விற்பனை மந்தமானது. லாபம் சரிந்தது. தற்போது அந்த பிரச்னைகள் குறைந்து மாருதி சுசூகியின் விற்பனை அதிகரித்துள்ளது, நிறுவனத்தின் செயல்பாடு மேம்பட்டுள்ளது. சர்வீஸ் போன்ற பிற வகையிலான வருமானமும் கூடியதால் லாபம் ரூ.475.3 கோடியிலிருந்து ரூ.2,061 கோடியாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டைக் காட்டிலும் 46 சதவீதம் உயர்ந்து ரூ.29,931 கோடியாக அதிகரித்திருக்கிறது.
![]()
|
செப்டம்பர் காலாண்டு முடிவில் வாடிக்கையாளர்களுக்கான நிலுவையில் உள்ள ஆர்டர்களின் எண்ணிக்கை சுமார் 4.12 லட்சம் வாகனங்களாக உள்ளது. இதில் 1.3 லட்சம் வாகன முன்பதிவுகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களுக்கானது.
![]()
|
பங்கு ஒன்றின் விலை ரூ.9,062லிருந்து 485 ரூபாய் அதாவது 5.3% உயர்ந்து, ரூ.9,548 ஆக வர்த்தகத்தை நிறைவுச் செய்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 சதவீதத்திற்கு மேல் இப்பங்குகளின் விலை உயர்ந்தன. இந்தாண்டில் இதுவரை 27% உயர்ந்துள்ளது.