பி.நரி முருகன், பொள்ளாச்சி, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரத்தில், அவரை மனைவி ஜானகி, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த பின், மூன்று ஆண்டுகள் தமிழக மக்களுக்காக சேவை செய்தார். நடிகர் ரஜினிக்கு உடல்நலப் பிரச்னை வந்த போது, அவரது மனைவியும் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற ஏற்பாடு செய்ததால், இன்றும் அவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர்கள் விஜயகாந்த், டி.ராஜேந்தர் போன்றோரையும், அவர்களின் குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததால், அவர்கள் நலமுடன் இருக்கின்றனர். சமீபத்தில் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி உடல் நலமின்றி இருந்த போது, அவரது மகள் கனிமொழி, வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து கூட்டி வந்துள்ளார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது, அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதி, வாய்ப்புகளும் இருந்தன.
அவ்வளவு ஏன்... அரசே, அ.தி.மு.க., வசம் தான் இருந்தது; மத்திய அரசும் தமிழக அரசுக்கு ஆதர வாக இருந்தது. உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் ஜெயலலிதாவை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கலாம்.
ஆனாலும் அதைச் செய்யவில்லை. இதற்கு யார் காரணம் என்பது, நாட்டு மக்களுக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் நன்கு தெரியும். இன்றைக்கு அந்த நபர்கள் தான் பசுத்தோல் போர்த்திய புலியாக, 'அ.தி.மு.க., என்ற இயக்கத்தை கட்டிக்காக்க, தன்னை விட்டால் ஆளே இல்லை' என்றும் கூறி வருகின்றனர்; ஆபத்பாந்தவர்கள் போல வலம் வருகின்றனர்.
அந்த பசுத்தோல் போர்த்திய புலியை, உண்மையான அ.தி.மு.க.,வினர் ஓரங்கட்ட வேண்டும்.
சாத்தான்களே... வேதம் ஓதாதீர்கள்!
எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கோவையில் காரில் காஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில், மத வெறி சக்திகளின் வெறுப்பு அரசியலுக்கு இரையாகாமல், அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூ., மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இவரும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க., கட்சியினரும், சில நாட்களுக்கு முன், 'ஆர்.எஸ்.எஸ்., ஒரு பயங்கரவாத அமைப்பு; அதை தமிழகத்திற்குள் வரவிட மாட்டோம். அந்த அமைப்பினர் ஊர்வலம் நடத்த அனுமதிக்க மாட்டோம்' என, ஓலமிட்டனர். ஆனால் இப்போது, கோவை மாநகரம் மாபெரும் சதித் திட்டத்தில் இருந்து தப்பித்திருக்கிறது.
அதற்கு கண்டனக் குரல் எழுப்ப துப்பில்லை. அதற்கு பதிலாக, 'மத வெறி சக்திகளின் வெறுப்பு அரசியலுக்கு இரையாகாமல் இருக்க வேண்டும்' என, மக்களுக்கு யோசனை கூறுகின்றனர்.
மேலும், கோவையில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை, இரண்டு நாட்களாக விபத்து என்றே அரசு கூறி வந்தது; இப்போது தான் உண்மை அம்பலமாகி, பயங்கர சதிக்கான முன்னோட்டம் என கண்டறிந்து, தேசிய புலனாய்வு நிறுவன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு தான் முதல்வர் வாழ்த்து சொல்லவில்லை; அதை, மக்கள் எதிர்பார்க்கவும் இல்லை. கோவை மக்கள் ஒரு பெரிய சதியில் இருந்து தப்பித்து இருக்கின்றனர். அவர்களுக்கான ஆறுதல் வார்த்தை, சதிச் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது. அதையும் முதல்வர் ஸ்டாலின் செய்யவில்லை.
'இனிமேல் சதிச்செயல் புரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கையும் விடுக்கவில்லை. முதல்வருக்கு மக்களின் நலனை விட, சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியே பெரிதாகத் தெரிகிறது.
சிலிண்டர் வெடித்து பலியான, ஜமேஷா முபினுக்கு இறுதிச் சடங்கு செய்ய எந்த ஜமாத்தும் முன்வரவில்லை. அந்த சமுதாய மக்களே, இதன் வாயிலாக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். சம்பவம் நடந்து இரண்டு, மூன்று நாட்கள் கழிந்த பின் தான், பாலகிருஷ்ணனே வாய் திறந்திருக்கிறார்.
இவர் சொல்வதை கேட்கும் போது, சாத்தான்களே வேதம் ஓதாதீர்கள் என்று தான் கூறத் தோன்றுகிறது. அதே நேரத்தில், வறட்டு தவளைகளான வைகோ, திருமாவளவன் போன்றோர் எங்கே போயினர் என்றே தெரியவில்லை.
பதவியை காப்பாற்ற மங்குனிகளாக இருக்கும் இவர்கள் எல்லாம் தலைவர்கள்... இவர்களை நம்பி ஒரு கூட்டம்...!
அத்துமீறல்களை தவிருங்கள் மீனவர்களே!
ரா.சேது,
மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வங்கக் கடலில், பாக்
ஜலசந்தி பகுதியில், சந்தேகப்படும்படியாக ஒரு படகு சென்றது. பலமுறை
எச்சரித்தும் நிற்காமல் சென்றதால், படகில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை
விடுக்கும் விதமாக, படகை நோக்கிச் சுட்டோம். அதில், வீரவேல் என்ற மீனவர்
மீது குண்டு பாய்ந்தது.
'உடனடியாக, உச்சிப்புளி விமானப்படை
தளத்திலிருந்து, ஐ.என்.எஸ்., பருந்து ஹெலிகாப்டரை வரவழைத்து, அவரை மீட்டு
முதலுதவி சிகிச்சையளித்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்,
மதுரை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை
அளிக்கப்படுகிறது.
'இது குறித்த விசாரணைக்கும்
உத்தரவிடப்பட்டுள்ளது' என, மீனவர் மீது குண்டு பாய்ந்த விவகாரம் தொடர்பாக,
இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையினர்,
இலங்கை கடற்படையினரை போல படகை சேதப்படுத்தவோ, மீனவர்களை சிறைபிடிக்கவோ,
மூர்க்கத்தனமாக தாக்கவோ செய்யவில்லை. கண்மூடித்தனமாகவோ, வேண்டுமென்றோ
சுட்டு விடவில்லை. சந்தேகப்படும் வகையில் படகு நிற்காமல் சென்றதால், படகில்
இருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக சுட்டுள்ளனர்.
இந்த
விஷயத்தில் தங்களின் தவறை ஒப்புக் கொண்டதுடன், குண்டு பாய்ந்த மீனவருக்கு
உடனடியாக முதலுதவி அளித்து, அவரை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில்
சேர்த்து மனிதாபிமானத்துடன் நடந்துள்ளனர்.
இந்திய கடல்
எல்லைக்குள் இலங்கை மீனவர்களும், இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக
மீனவர்களும் மீன் பிடிப்பதும், சமீப நாட்களாக, இலங்கை அகதிகள்
தனுஷ்கோடியில் வந்திறங்குவதும் அடிக்கடி நடந்து வருகிறது.
இலங்கையிலிருந்து
தென்மாநில கடல் பகுதி வழியாக, சீன உளவாளிகள்ஊடுருவி விடலாம் என
அஞ்சப்படுவதால், இந்திய கடற்படையினர் விழிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களின் எச்சரிக்கையை மீறியதால், தற்போதைய துரதிருஷ்டமான சம்பவம்
நிகழ்ந்துள்ளது.
எனவே, மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், இந்திய,
இலங்கை ராணுவத்தினருக்கு முழு ஒத்துழைப்பு தந்து, இது போன்ற சம்பவங்கள்
நடக்காமல் தவிர்க்க வேண்டும்; தேசவிரோத, சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமலும்
இருக்க வேண்டும்.