மறைமலை நகர்:விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம், 22. இவர், சிங்கப்பெருமாள் கோவிலில், உறவினர் வீட்டில் தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு, பணி முடிந்து சிங்கப்பெருமாள் கோவில் அரசு பள்ளியின் பின்புறம் உள்ள மைதானம் அருகே வந்த போது, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம நபர்கள், அவரை வழிமறித்தனர்.
விக்ரமிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது பர்சில் இருந்த, 500 ரூபாய் மற்றும் ஏ.டி.எம்., கார்டை எடுத்துக் கொண்டு, பின் நம்பரையும் கேட்டு, கத்தியால் தாக்கினர்.
இதில் பயந்த விக்ரம், நம்பரை தெரிவிக்கவே, அங்கிருந்து சென்ற மர்ம நபர்கள், ஏ.டி.எம்.,மில் 3,000 ரூபாயை எடுத்து சென்றனர். இது குறித்து விக்ரம், நேற்று காலை மறைமலை நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.