திருப்போரூர்:கண்டிகை அடுத்த நல்லம்பாக்கம் கிராமம், கலைஞர் தெருவை சேர்ந்த பாபு மகன் யுவராஜ், 16. இவர், மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.
நேற்று காலை, வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக, தாம்பரத்தில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்ற மாநகர பேருந்தில் ஏறினார். கூட்டம் காரணமாக, முன் பக்க படிக்கட்டில் தொங்கினார். கண்டிகையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் எதிரே, மாணவன் திடீரென கிழே விழுந்தார்.
இதில், பேருந்தின் பின்பக்க சக்கரம் மாணவன் இடுப்பின் மீது ஏறி இறங்கியது. இதனால், மாணவர் யுவராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தாழம்பூர் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையிலான போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
இரு நாட்களுக்கு முன், இதே வண்டலுார் - -கேளம்பாக்கம் சாலை, கொளப்பாக்கத்தில், கல்லுாரி மாணவன் பேருந்தின் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.