திருந்துங்கள் தி.மு.க., கூட்டணி தலைவர்களே!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

திருந்துங்கள் தி.மு.க., கூட்டணி தலைவர்களே!

Added : அக் 29, 2022 | கருத்துகள் (3) | |
திருந்துங்கள் தி.மு.க., கூட்டணி தலைவர்களே!ஆர்.என்.ராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவையில் சமீபத்தில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், நல்லவேளையாக பெரிய அளவில் உயிர்ச்சேதம் இல்லை. காரை ஓட்டி வந்தவர் மட்டுமே பலியாகி உள்ளார். இந்தச் சம்பவம் பெரிய சதி வேலைக்கான முன்னோட்டமாக இருந்தும், இரண்டு, மூன்று நாட்களாக மூடி மறைத்த தி.மு.க., அரசு,


திருந்துங்கள் தி.மு.க., கூட்டணி தலைவர்களே!ஆர்.என்.ராஜன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவையில் சமீபத்தில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், நல்லவேளையாக பெரிய அளவில் உயிர்ச்சேதம் இல்லை. காரை ஓட்டி வந்தவர் மட்டுமே பலியாகி உள்ளார். இந்தச் சம்பவம் பெரிய சதி வேலைக்கான முன்னோட்டமாக இருந்தும், இரண்டு, மூன்று நாட்களாக மூடி மறைத்த தி.மு.க., அரசு, அதன் பிறகே, சம்பவத்தின் பின்னணியில் பெரிய விபரீதமே உள்ளதை அறிந்து, தேசிய புலனாய்வு நிறுவன விசாரணையை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
இதே போன்ற ஒரு சம்பவம், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் நடந்திருந்தால், அனைத்து கட்சிகளும், அனைத்து காட்சி ஊடகங்களும், 24 மணி நேரமும் விவாதம் நடத்தி, 'தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை; சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அடிமை ஆட்சியில் துணை ராணுவம் வந்து விட்டது. தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் விசாரணையை ஒப்படைத்தது, ஆட்சியாளர்களின் இயலாமையை காட்டுகிறது' என்று குதித்திருப்பர்.
அத்துடன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தையே, ஒரு விபத்து என்று மாற்றி, இறந்து போனவரின் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்திருப்பதுடன், அரசின் சார்பில் அவர்களுக்கு நிவாரணத் தொகையும் வழங்கியிருப்பர். இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை தர வேண்டும் என்றெல்லாம் சொல்லி, அவரை தியாகியாகவே மாற்றி இருப்பர்.
தமிழக முதல்வர் அவர்களே, ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள்... எந்த மதமும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை. எனவே, இனியாவது அனைத்து மதத்தையும் சமமாக மதியுங்கள். எந்த மதம் பற்றி, யார் இழிவாக பேசினாலும், யார் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டாலும் நடவடிக்கை எடுங்கள்; இது தொடர்பாக, காவல் துறைக்கும் தக்க உத்தரவு பிறப்பியுங்கள்.
ஓட்டு வங்கியை, தயவு செய்து மறந்து விடுங்கள். நீங்கள் இது போல அமைதி காத்தால், இஸ்லாமிய சமுதாயத்தினரே, உங்கள் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர்களே... பயங்கரவாத வன்முறை விஷயத்தில், தயவு செய்து நீங்கள் நடுநிலையோடு நடந்து கொள்ளுங்கள். கோவையில், சமீபத்தில் நிகழ்ந்த சம்பவத்திற்கு, உளவுத் துறையின் கவனக் குறைவும் காரணம். மாபெரும் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியுள்ளது தெரியவந்தும், நீங்கள் கண்டனம் தெரிவிக்காமல், வாய் மூடி மவுனியாக இருப்பது கேவலத்திலும் கேவலமானது.
ஒரு அரசியல் கட்சி ஓட்டுக்காக, யார் இறந்தாலும் கவலைப்படாது, எந்த பயங்கரவாதத்தையும் கண்டிக்காது என்ற நிலையில் இருந்தால், அக்கட்சி என்று சொல்லிக் கொள்வதற்கும், 'மக்களுக்கு சேவை செய்கிறேன்' என்று சொல்வதற்கும், எந்த அருகதையும் இல்லை. இதை உணர்ந்து கொள்ளுங்கள்; திருந்துங்கள் தி.மு.க., கூட்டணி தலைவர்களே...!


கட்சிகளை மாட்டிவிட்ட கெஜ்ரிவால்!வி.எச்.கே.ஹரிகரன், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்திய பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்ட நாம் நிறைய செய்ய வேண்டி உள்ளது... அதற்கு கடவுளின் ஆசியும் தேவை. லட்சுமி செல்வத்திற்கான கடவுள்; விநாயகர் தடைகளை நீக்குபவர்.
'இந்திய ரூபாய் நோட்டில், ஒரு பக்கம் காந்திஜி படம் வைத்துள்ளோம். அது அப்படியே இருக்கட்டும்... நோட்டின் மறு பக்கத்தில் லட்சுமி, விநாயகர் கடவுள்களின் படங்களை அச்சிட வேண்டும்.'புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகட்டும். புதிதாக ரூபாய் நோட்டுகள் அடிக்கும் போது, இப்படி செய்யலாம்' என, டில்லி முதல்வர் கெஜ்ரிவால் யோசனை தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தது முதல், எந்த அரசியல் தலைவரும் சொல்லாத யோசனை இது.
இதன் வாயிலாக, இதுவரை பின்பற்றிய மதசார்பற்ற கொள்கையிலிருந்து, கெஜ்ரிவால் பின்வாங்குவது தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பா.ஜ.,வுக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியை விட, கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தான் முன்னணியில் உள்ளது. அதனால், குஜராத் மக்களை கவர்வதற்கான தேர்தல் தந்திரமாகவும், கெஜ்ரிவால் இந்த யோசனையை தெரிவித்து உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கெஜ்ரிவாலின் இந்த கோரிக்கையை ஆட்சேபித்தால், ஹிந்துக்கள் கோபப்படுவர்; ஆதரித்தால் சிறுபான்மையினர் அதிருப்தி அடைவர். மதசார்பற்ற கொள்கையை பின்பற்றுவதாக கூறிக் கொள்பவர்கள், நிச்சயமாக இதை ஆதரிக்க முடியாமல் தவிப்பர். மொத்தத்தில் எல்லா கட்சிகளுக்கும், இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தி விட்டார் கெஜ்ரிவால். தொலைக்காட்சிகளுக்கும் சில நாட்கள் விவாதிக்க, நல்லதொரு, 'சப்ஜெக்ட்' கிடைத்து விட்டது.


சபாநாயகர் கவனிப்பாரா?எஸ்.கிருஷ்ணன், கோவையில் இருந்து எழுதுகிறார்: சட்டசபை கூட்டத்தொடர் கூடும் போதெல்லாம், முதல் நாளன்று கட்சி பாகுபாடின்றி, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. அதன்பின், ௨ நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியதும், அன்றைய கூட்டத்தொடரை ஒத்திவைத்து விடுகின்றனர்.
சட்டசபையின் ஒரு நாள் கூட்டத்தொடருக்கு, தமிழக அரசு எத்தனையோ லட்சம் ரூபாயை செலவிடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், அன்றைய கூட்டத்தொடரை நடத்தினால் என்ன?அப்படி ஒரு நாள் சபை நடக்கும் போது, எத்தனையே பிரச்னைகளை தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் பேச முடியும்; உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது, பலவிபரங்கள் தெரியவரும். ஒரு வேளை, சபையின் தற்போதைய உறுப்பினர் திடீரென மரணமடைந்து விட்டார் என்றால், அவருக்கு அஞ்சலி செலுத்த மற்ற உறுப்பினர்கள் போக வேண்டும் என்பதால், சபை நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதில் அர்த்தம் உள்ளது. அதற்கு மாறாக, ஏற்கனவே மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின், சபையை ஒத்திவைப்பதை தவிர்ப்பதே நல்லது.
இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய பின், சபை கலைந்து விடுவதால், எம்.எல்.ஏ.,க்களுக்கு அமர்வு படி வழங்கப்படுகிறது. இதனால், சபை நடக்காமலேயே அவர்கள் ஆதாயம் பெறுகின்றனர். மேலும், ஒரு முறை சட்டசபை கூட்டத்தொடர் துவங்கினால், குறைந்தபட்சம் ஏழு முதல், ௧௦ நாட்கள் வரை நடக்க வேண்டும். அப்போது தான், ஆரோக்கியமான பல விவாதங்கள் சபையில் நடைபெறும்.
இந்த விஷயத்தில், திராவிட மாடல் அரசு சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும். சட்டசபை சபாநாயகரும், அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!


ஸ்டாலின் வாழ்த்து தேவையே இல்லை!எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஹிந்துக்களின் பண்டிகையான தீபாவளியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வீட்டிலும், தீபாவளி விருந்து நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு முதல், தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறி இருக்கிறார்.
பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் என்ற, ஹிந்து பதவி ஏற்றிருக்கிறார். கிறிஸ்துவ நாடுகளான அமெரிக்காவிலும், பிரிட்டனிலும், இந்தியர்களுக்கும், ஹிந்துக்களுக்கும் கிடைத்திருக்கும் இந்த மரியாதையை நினைத்தாலே பெருமையாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இது, அந்த நாட்டு தலைவர்களின் பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, மனமுதிர்ச்சியை காட்டுகிறது.
ஆனால், 88 சதவீத ஹிந்துக்கள் வாழும் மாநிலத்தை ஆளும் முதல்வர் ஸ்டாலின், ஹிந்துக்களின் ஓட்டுகளையும் பெற்று பதவியில் அமர்ந்திருப்பவர், ஹிந்துக்களின் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். காரணம் கேட்டால், 'நான் ஈ.வெ.ரா., வழியில் ஆட்சி செய்பவன்' என்கிறார். அதாவது, 'நாத்திகரான என்னிடம் வாழ்த்துகளை எதிர்பார்ப்பது ஏன்?' என்று எதிர் கேள்வி கேட்பது போல இருக்கிறது.
தி.மு.க.,வை துவக்கிய அண்ணாதுரை, முதல்வரான பின் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்தார். அதனால் தான், 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு' என்று சொன்னார். ஆனால், அவரின் கொள்கையை முற்றிலும் புறந்தள்ளி, ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, ஹிந்துக்களை மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்லவில்லையே என்று, தமிழகத்தில் உள்ள ஹிந்துக்களில் ஒருவர் கூட அலட்டிக் கொள்ளவில்லை. நல்ல உள்ளம் படைத்த, இறை நம்பிக்கை உடைய, மாற்று மதத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான சகோதரர்கள் மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்து உள்ளனர்; அதுவே போதுமானது.
பக்கா நாத்திகவாதியாக காட்டிக் கொள்ளும் முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து, ஒருபோதும் இனி ஹிந்துக்களுக்கு தேவையே இல்லை.


நெடுஞ்செழியனாக மாற வேண்டும் பன்னீர் செல்வம்!டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீதிமன்ற தீர்ப்புகள் காரணமாக, ஜெயலலிதாவின் முதல்வர் பதவிக்கு பிரச்னை வந்த போதெல்லாம், அவர் தன் பதவியை பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்தார்.
பிரச்னை தீர்ந்ததும், மீண்டும் ஜெயலலிதாவிடமே முதல்வர் பதவியை திரும்ப தந்து விடுவார் பன்னீர். எனவே, 'ராமாயண பரதன்' என, பன்னீரை புகழ்ந்தார் ஜெயலலிதா. அதையே மனதில் வைத்து, அ.தி.மு.க., தலைமை பதவியை பிடிக்க பன்னீர் முயற்சிப்பது தவறு.
அண்ணாதுரை முதல்வராக இருந்த போது, அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன்; தி.மு.க., பொதுச் செயலராகவும், ஆட்சியில் கல்வி அமைச்சராகவும் இருந்தார்.அந்த தருணத்தில், ஒரு விழாவில் அண்ணாதுரை பேசும் போது, 'தம்பியே வா... தலைமை ஏற்க வா' என, நெடுஞ்செழியனை அழைத்தார். அதற்காக, அண்ணாதுரை மறைவிற்குப் பின், நெடுஞ்செழியனா கட்சியின் தலைவரானார்... கருணாநிதி தானே அந்தப் பதவிக்கு வந்தார்.
அதன்பின், அ.தி.மு.க.,வுக்கு தாவிய நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர்., தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், கட்சியில் பொதுச் செயலராகவும், தன் இரண்டாம் இடத்தை தக்கவைத்தார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், 'அ.தி.மு.க., நால்வர் அணி' என்ற புதிய கட்சியை துவக்கிய நெடுஞ்செழியன், அது போணியாகாததால், ஜெயலலிதா தலைமையை ஏற்று, அ.தி.மு.க.,வில் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டார்.
பின், ௧௯௯௧ல் ஜெ., அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்ததுடன், அ.தி.மு.க., அவைத் தலைவராகவும், கட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்தார். எனவே, மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, அ.தி.மு.க.,வில் இருந்து ஒதுக்கக் கூடாது; அவரும், அரசியலில் இருந்து ஓய்வு பெறவும் கூடாது. அரசியல் சூழ்நிலையை புரிந்து, நெடுஞ்செழியனை போல, தன் வாழ்நாளில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். இந்த விஷயத்தில் நெடுஞ்செழியனாக மாற வேண்டும் பன்னீர்செல்வம்.


வயிறு குலுங்க சிரிக்கும் நாள்எந்நாளோ?என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'திராவிட மாடல் ஆட்சியின், ஒன்றரை ஆண்டு மகத்தான சாதனையாக எதை கருதுகிறீர்கள்?' என்ற கேள்விக்கு, 'தமிழக மக்களின் முகங்களில் தெரியும் சிரிப்பு தான்' என்று பதில் அளித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
சிரிப்பில் எத்தனையோ வகைகள் உண்டு என்பதை, அன்றைக்கு விதவிதமாகச் சிரித்து வெளிப்படுத்தினார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு, சதிகாரர்களின் சாகச சிரிப்பு, அடங்கிப் போவோரின் அசட்டுச் சிரிப்பு, கர்நாடக சங்கீத வித்துவான்களின் சங்கீத சிரிப்பு என்று வகைப்படுத்தி, சிரிப்பாய் சிரித்து, ரசிகர்களையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் அவர். இப்போது, தமிழக மக்களின் முகத்தில் தெரியும் சிரிப்பு, என்.எஸ்.கே., சொன்னதில், எந்த வகையைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சி செய்தால், அது, 'விடியலை தரப் போகிறார் ஸ்டாலின்...' என்ற நம்பிக்கையில், ஓட்டு போட்டு ஏமாந்த சோணகிரிகளின் அசட்டு சிரிப்பாகவே இருக்கும்.
'துன்பம் வரும் போது சிரிங்க' என்று, 'அட்வைஸ்' செய்தார் திருவள்ளுவர். 'பாம்பு வந்து கடிக்கையில், பாழும் உடம்பு துடிக்கையில், யார் முகத்தில் தோன்றும் சிரிப்பு?' என்று கேள்வி கேட்டார் கவியரசு கண்ணதாசன்.
ரேஷன் கடைகளில் இலவசமாக போடப்படும், நாற்றமெடுத்த அரிசியை வாங்கி சாப்பிடும் பரிதாப நிலையில், இன்று தமிழக மக்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.இந்த அப்பாவிகளின் முகத்தில், எப்படி சிரிப்பை பார்க்க முடியும்? ஒரு வேளை, 'எங்கள் பொழப்பே இப்படி சிரிப்பாய் சிரிச்சு போச்சே' என்ற விரக்தியில், வேதனையில் சிரிக்கின்றனரோ!
தமிழக மக்கள் சிரித்து, சந்தோஷமாக இருப்பதை பார்க்கும் முதல்வர் மட்டும், இரவில் நிம்மதியின்றி துாக்கம் இல்லாமல் தவிக்கிறாரே... ஏன்? 'சிரித்து வாழ வேண்டும்; பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே' என்று எம்.ஜி.ஆர்., பாடி இருக்கிறார். தமிழக மக்கள், உண்மையில் வயிறு குலுங்க சிரிக்கும் நாள் என்று வருமோ... அது, அந்த கடவுளுக்கே வெளிச்சம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X