புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே, திருமணத்தில் தாலி கட்டியவுடன் மணமகன் உடல் உறுப்பு தானம் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே, சேந்தன்குடி பகுதியைச் சேர்ந்த துரை மகன் ராஜேஷ், 25. கோவையில் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
முதல்வர் ஸ்டாலின் பெயரில் உள்ள ரத்த தான கழகத்தில் இணைந்து, 15க்கும் மேற்பட்ட முறை ரத்த தானமும் செய்துள்ளார்.
அணவயலைச் சேர்ந்த உமாமகேஸ்வரி, 22, என்பவருக்கும், ராஜேஷுக்கும் நேற்று முன்தினம் சேந்தங்குடியில் திருமணம் நடைபெற்றது.
மணமகள் கழுத்தில் தாலி கட்டியவுடன், மணமகன் ராஜேஷ், தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.
மணமகன் ராஜேஷ் கூறியதாவது:
உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து, உமா மகேஸ்வரியிடம் முன்பே தெரிவித்து விட்டேன். அவர் நர்ஸ் என்பதால், இதற்கு ஒப்புக் கொண்டார்.
எல்லோரும் உயிருடன் இருக்கும் வரை, ரத்த தானமும், இறக்கும் போது, உடல் உறுப்புகளையும் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திருமணத்திற்கு வந்த உறவினர்கள் ராஜேஷின் செயலைப் பார்த்து, நெகிழ்ச்சியோடு பாராட்டினர். மேலும், திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மணமக்கள் தென்னங்கன்றுகளை பரிசாக வழங்கினர்.