பி.புருஷோத்தமன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், ௮௮ சதவீதம் ஹிந்துக்களும், 12 சதவீதம் மற்ற மதத்தினரும் உள்ளனர். ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நம் மாநிலத்தில், பல ஆயிரம் கோவில்களும், அங்கெல்லாம் தினமும் வழிபாடுகளும் நடந்து வருகின்றன.
இப்படி இருந்தும், ஹிந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல மறுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், மற்ற மத பண்டிகைகளுக்கு, அவர் வாழ்த்து சொல்ல தவறுவதில்லை. பெரும்பான்மை ஹிந்துக்களின் ஓட்டுகளைப் பெற்று ஆட்சியில் இருக்கும் அவர், ஹிந்துக்களை அவமதிப்பது போல நடந்து கொள்வது வேதனைக்குரியது.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு, ஹிந்துக்களாகிய நாம் அனைவரும், அடுத்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராக செயல்பட வேண்டும். பா.ஜ.,வுக்கு பெருவாரியான ஓட்டுக்களை அளித்து, நம் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மேம்பட செய்ய வேண்டும்.
ஹிந்துக்களை அவமானப்படுத்தும் திராவிட செம்மல்களை ஓட ஓட விரட்ட வேண்டும். அதுவே, ஹிந்துக்களை அவமதிக்கும் ஆட்சிக்கு, நாம் தரும் சரியான தண்டனை!
அது மட்டுமின்றி, மற்ற மதத்தினர் ஹிந்து மதத்தை அவமானப்படுத்தும் போதும், முதல்வர் ஸ்டாலின் அதை கண்டுகொள்வதில்லை; இது, மற்ற மதத்தினருக்கு சலுகையாக போய் விடுகிறது. 'ஹிந்து மதத்தை நாம் எப்படி வேண்டுமானாலும் குறை சொல்லலாம்; ஆட்சியாளர்கள் நம்மை கண்டு கொள்ள மாட்டார்கள்' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. அத்துடன், ஹிந்துக்கள் மீது அவர்கள் வன்முறையையும் திணிக்க காரணமாகிறது.
இந்த நிலைமை மாற வேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு சட்டசபை தேர்தல் தான்.
வரும் தேர்தலில் ஹிந்துக்கள் கொடுக்கும் சாட்டையடி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு சரியான பாடமாக அமைய வேண்டும். இல்லையெனில், ஹிந்து மதத்திற்கு எதிரான துவேஷங்கள் தொடர்ந்தபடி தான் இருக்கும். இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் ஹிந்துக்களே!
மூன்றரை ஆண்டும் துாக்கமின்றி தவிப்பீர்கள்!
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியின் போது, அவர்கள் எந்த விஷயத்தில் தடுக்கி விழுந்தாலும், அதை உடனே அரசியலாக்கி ஆதாயம் கண்டவர், தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின். அதே பாணியை தற்போது, தி.மு.க., ஆட்சியாளர்களுக்கு எதிராக பின்பற்றுகிறார்,தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.
'திராவிட மாடல்' ஆட்சியின் பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் முதல், சமீபத்திய கார் குண்டு வெடிப்பு வரை, ஆட்சியாளர்களின் ஒவ்வொரு தவறுகளையும் சுட்டிக்காட்டி வருகிறார். இது, ஸ்டாலின் அரசுக்கு பெரிய தலைவலியாக இருப்பதுடன், ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்தும் வருகிறது.
ஏற்கனவே, தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சர்ச்சைக்குரிய பேச்சுக்களால், முதல்வர் துாக்கமின்றி தவித்து வருகிறார். அந்த துாக்கமின்மையை மேலும் அதிகரிக்கும் வகையில், அண்ணாமலையின் செயல்பாடுகள் உள்ளன.
தாங்கள் செய்வதெல்லாம் சரி என, தங்களுக்கு தாங்களே சான்றிதழ் கொடுத்துக் கொள்ளும் தி.மு.க.,வினர், எதிர்க்கட்சியினரின் ஜனநாயக ரீதியான செயல்பாடுகளை அடக்கி ஆள நினைப்பது, முற்றிலும் சரியானதல்ல.
ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி, திருத்த வாய்ப்பு தருவதும், மக்களுக்கு வரும் பேராபத்துகளை தடுக்க குரல் கொடுப்பதும், அதற்காக போராட்டம் நடத்துவதும், எதிர்க்கட்சிகளின் கடமை. அந்த மக்கள் சேவையை தான், அண்ணாமலை செய்து வருகிறார். ஆட்சியாளர்களின் செயல்பாடு நேர்மையாக இருந்தால், அண்ணாமலையை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்; அமைச்சர்கள் வாயிலாக, அவர் மீது ஏன் சேற்றை வாரி வீச வேண்டும்?
முதல்வர் அவர்களே... ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் எனில், நியாயம், நீதி, தர்மம், சட்டம் விதிமுறைகளின்படி செயல்படுங்கள்... அதை விடுத்து, 'தவறு நடந்தால் கண்டுக்க கூடாது... விமர்சனம் செய்யக்கூடாது' என்று சொல்ல, இந்தியா ஒன்றும் சர்வாதிகார நாடல்ல!
'எதிர்க்கட்சிகள் என்றால் அரசியல் தான் செய்வர்; அவியலா செய்வர்' என, பழனிசாமி ஆட்சியின் போது சொன்னதே, நீங்கள் தானே. அந்த அரசியலை தான், அண்ணாமலை செய்கிறார். தவறை நிரந்தரமாக தடுக்க, நீங்கள் தான் வழி தேட வேண்டும். இல்லையெனில், இப்போது மட்டுமின்றி, மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளும், மன வேதனையோடு நீங்கள் துாக்கமின்றி தவிக்க நேரிடும்... உஷார்!
தமிழகமே போதையில் மிதக்கிறது!
செ.சாந்தி, மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தீபாவளியை முன்னிட்டு இம்மாதம், 22, 23, 24ம் தேதிகளில் மட்டும், 725 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியானது. இந்தத் தகவலை வெளியிட்ட ஊடகங்களை, அமைச்சர் செந்தில் பாலாஜி மிரட்டி உள்ளார்.
அதாவது, 'தீபாவளி முடிந்து, நிர்வாகத்திற்கே முழு விபரங்கள் வந்து சேராத சூழலில், விற்பனை விபரம் என்ற பொய் தகவலை வெளியிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என மிரட்டும் தொனியில், அவர் பேசியிருக்கிறார்.
சாதாரண நாட்களில், தினமும், ௧௦௦ கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகும்; பண்டிகை நாட்களில், விற்பனை மூன்று, நான்கு மடங்கு எகிறி விடும் என்பது உண்மை நிலவரம்.
மது தயாரிப்பதில் இருந்து விற்பனை வரை அனைத்திலும், பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, முறைகேடு நடப்பது ஊரறிந்த ரகசியம்.
இதில், ஆளும் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வளவு ஊழல் செய்கின்றனர், யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது மட்டுமே சிதம்பர ரகசியம்.
எவ்வளவு மது விற்பனை நடந்தால், எவ்வளவு ஊழல் நடந்திருக்கும் என்பது, சாமானிய மக்களுக்கு தெரிந்து விடும் என்பதால், மது விற்பனை விபரங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி மறைக்கப் பார்க்கிறார்.
கிடங்கில் இருந்து மது வகைகளை அனுப்புவது முதல் கடை விற்பனை வரை முழுவதையும், கணினி மயமாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டரை, 'டாஸ்மாக்' நிறுவனம் ரத்து செய்துள்ளது.
டாஸ்மாக் விற்பனை விபரங்களை வேறு யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது... ஊழல் வெளிச்சத்திற்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான, பொன்னியின் செல்வன் திரைப்படம், 500 கோடி ரூபாய்க்கு மேல் பெரும் பொருட்செலவில் தயாரான படம்.
தமிழக மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று, அரங்கம் நிறைந்த காட்சிகளாக இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் படம் தயாரிக்க செலவான, ௫௦௦ கோடி ரூபாயை, படத் தயாரிப்பாளர் எடுத்து விட்டாரா என்பது சந்தேகமே.
ஆனால், டாஸ்மாக் விற்பனை வாயிலாக, பொன்னியின் செல்வன் திரைப்பட வசூலை முறியடித்து விட்டனர், தமிழக ஆட்சியாளர்கள். அத்துடன், மாநிலம் முழுதும், 'சரக்கு' விற்பனையை கொடிகட்டிப் பறக்க வைத்து, தமிழ் சமூகத்தை போதையில் மிதக்க வைத்து விட்டனர், கழக ஆட்சியாளர்கள். நல்ல நாடு... நல்ல மக்கள்... நல்ல அரசு!