வதோதரா-இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ'வுக்கு, 'கிரையோஜெனிக் ராக்கெட்' தொழில்நுட்பம் தர ஒரு காலத்தில் அமெரிக்கா மறுத்ததையும், நமக்கு உதவ முன்வந்த ரஷ்யாவுக்கு தடை விதித்ததையும் தன் பேச்சில் மறைமுகமாக சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, இன்றைக்கு ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களை ஏவி, நாம் கரம் வைத்து சாதித்ததை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார்.
![]()
|
நம் விமானப்படை வீரர்களின் போக்குவரத்துக்கு, 'ஆவ்ரோ 748' வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகை விமானங்கள், 1960களில் கொள்முதல் செய்யப்பட்டவை.
இதையடுத்து, அந்த விமானங்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய நவீன போக்குவரத்து விமானங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டது.
இதற்காக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'ஏர்பஸ்' நிறுவனத்தின், 'சி 295' ரக விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. மொத்தம், 21 ஆயிரத்து 935 கோடி ரூபாய் மதிப்பில், 56 விமானங்களை வாங்க கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதிய சகாப்தம்
இந்த ஒப்பந்தப்படி, நான்கு ஆண்டுகளுக்குள், 16 விமானங்கள் நம் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. மீதமுள்ள 40 விமானங்கள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளன.
இதற்காக, 'ஏர்பஸ்' நிறுவனம், நம் நாட்டைச் சேர்ந்த, 'டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ்' நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த விமான தயாரிப்பு தொழிற்சாலை, குஜராத்தின் வதோதராவில் உருவாகிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பிரதமர் பேசியதாவது:
உலகின் மிக முக்கிய உற்பத்தி மையமாக நம் நாடு மாறி வருகிறது. மத்திய அரசின் கொள்கைகள் நிலையானதாகவும், கணிக்கக்கூடியதாகவும், எதிர்காலம் சார்ந்ததாகவும் இருப்பதால், நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களில் புதிய சகாப்தம் எழுதப்பட்டு வருகிறது.
இன்றைக்கு புதிய சிந்தனை மற்றும் புதிய பணி சூழலுடன் நாம் பணியாற்றி வருகிறோம். ராணுவ போக்குவரத்து விமான தயாரிப்பில் மிகப் பெரிய உற்பத்தியாளராக நாம் உருவெடுக்க உள்ளோம்.
நம் நாட்டிலேயே பயணியர் விமானங்களும் தயாரிக்கப்படும் நாட்களை இப்போதே என்னால் உணர முடிகிறது.
வதோதராவில் உருவாகும் இந்த விமான தொழிற்சாலையால் நம் ராணுவம் வலிமை பெறும்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல்வர் பூபேந்தர் படேல், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, 'டாடா சன்ஸ்' தலைவர் என்.சந்திரசேகரன், 'ஏர்பஸ்' நிறுவன தலைமை செயல் அதிகாரி குய்லாம் பவுரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கிடையே, 'மன் கீ பாத்' எனப்படும் மாதாந்திர மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரே நேரத்தில், 36 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் சாதனை படைத்துள்ளது.
தகவல் தொடர்பு வசதிகள்
தீபாவளி நேரத்தில் சிறப்பு பரிசாக அது அமைந்தது. இதன் வாயிலாக, 'டிஜிட்டல்' தொடர்புகள் நம் நாட்டில் மேம்படும். நாட்டில் உள்ள மிகவும் உள்ளடங்கிய பகுதிகளுக்கு கூட தரமான தகவல் தொடர்பு வசதிகள் கிடைக்கும்.
நாம் சுயசார்பு இந்தியாவாக உருவாகி வருவதற்கு இதுவே மிகச் சிறந்த சான்று. நாம் சுயசார்பு நிலையை அடைந்துவிட்டால் பல்வேறு உயரங்களை தொட முடியும்.
விண்வெளி துறையில், 'கிரையோஜெனிக் ராக்கெட்' தொழில்நுட்பம் ஒருகாலத்தில் நமக்கு மறுக்கப்பட்டது.
ஆனால், நம் விஞ்ஞானிகள் உள்நாட்டிலேயே அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினர். இதன் உதவியுடன் ஒரே நேரத்தில் ஏராளமான செயற்கைக்கோள்களை நாம் ஏவி வருகிறோம்.
விண்வெளி துறையின்சர்வதேச வர்த்தக சந்தையில் நாம் வலுவான நாடாக உருவெடுத்து வருகிறோம். இது, நமக்கு பல்வேறு வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது.
விண்வெளி துறையில் தனியாரும் பங்களிப்பு தர அனுமதித்த பின், ஏராளமான 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் முளைத்தன. இதன் வாயிலாக இத்துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் உருவாகின.
வரும் 2047ல் நாம் வளர்ந்த நாடாக உருவெடுக்க உழைத்து வருகிறோம். அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
![]()
|
இஸ்ரோவுக்கு, 'கிரையோஜெனிக் ராக்கெட்' தொழில்நுட்பம் தர அமெரிக்கா முன்னர் மறுத்ததையும், நமக்கு உதவ முன்வந்த ரஷ்யாவுக்கு தடை விதித்ததையும் தன் பேச்சில் மறைமுகமாக சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி, அதே துறையில் இன்றைக்கு நாம் செய்து வரும் மகத்தான சாதனைகளை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார்.
ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, மத்திய அரசு பணி உத்தரவு வழங்கும் முகாம் நேற்று நடந்தது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:தேசிய நீரோட்டத்தில் இணைந்த பின், ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகள் அபரிமிதமாக நடந்து வருகின்றன. அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பலன்கள் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.ஊழல், லஞ்சம் போன்றவற்றால் ஜம்மு - காஷ்மீர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது, லஞ்சம் - ஊழலற்ற, மிகவும் வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறது. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில், அரசுப் பணியில் சேரும் இந்த இளைஞர்கள் செயல்பட வேண்டும்.கடந்த கால சவால்களை மறந்துவிட்டு, நம் முன் உள்ள புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் மேற்கொண்ட முயற்சிகளால், மாநிலத்தில் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. முதலீடுகள் அதிகரித்துள்ளதால், புதிய புதிய வாய்ப்புகளும் கிடைக்கின்றன. இந்த நேரத்தில், இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.