வால்பாறை:நகராட்சி குடியிருப்புக்கு, 'சீல்' வைத்த அதிகாரி, தி.மு.க.,வினர் தலையீடால் பணி மாற்றம் செய்யப்பட்டார். அரசுக்கு சாபம் விட்டு, அந்த அதிகாரி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
![]()
|
கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சிக்கு சொந்தமான, 56 குடியிருப்புகளில், பணி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்கள், தற்காலிக பணியாளர்கள், 11 பேர் வீட்டை காலி செய்யாமல் இருந்தனர். வீட்டை காலி செய்யக்கோரி, நகராட்சி சார்பில் பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் பாலு உத்தரவின்படி, நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி தலைமையிலான அதிகாரிகள், போலீசார் முன்னிலையில், கடந்த வாரம் காலி செய்யப்படாத வீடுகளை பூட்டி, 'சீல்' வைத்தனர். வீடுகளுக்கு 'சீல்' வைத்த, நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி, நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்து நகரமைப்பு ஆய்வாளர் அறிவுடைநம்பி, வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2.30 நிமிடம் கொண்ட வீடியோவில், அவர் கூறியுள்ளதாவது:
வால்பாறை நகராட்சி கமிஷனர், தலைவர், தி.மு.க., நகர செயலாளர் ஆகியோரின் உத்தரவின்படி தான், வீடுகளை பூட்டி 'சீல்' வைத்தேன்.
இதற்காக, என்னை, நெல்லியாளம் நகராட்சிக்கு பணி மாற்றம் செய்துள்ளனர். நேர்மையாக பணி புரிந்தால் பணி மாற்றமா? இது தான் திராவிட மாடலா? தினமும் எவ்வளவு மாத்திரை சாப்பிடுகிறேன் பாருங்கள் (மாத்திரை பார்சலை காட்டுகிறார்). என் கண்ணீருக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். என் சாபம் உங்களை சும்மாவிடாது. அமைச்சர் சொன்னாலும், அதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று முதல்வர் விசாரிக்க வேண்டாமா. இது தான் திராவிட மாடல் ஆட்சியா...
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![]()
|
அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ''எனக்கு பெயர் வைத்ததே கருணாநிதி தான். ஆளுங்கட்சியினரின் அழுத்தம் காரணமாக, என்னை பணிமாற்றம் செய்துள்ளனர். அந்த ஆதங்கத்தில் வீடியோ வெளியிட்டேன்,'' என்றார்.