ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் திருக்கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் புனரமைக்க மெகா திட்டம் தயாராக உள்ளதாக, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த அவர், அங்கு மழை நீர் தேங்கும் பிரகாரம், பக்தர்கள் நீராடும் வழித்தடம், அக்னி தீர்த்த கடற்கரை, பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருக்கும் பகுதியை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியது:
உலகளவில் பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வருகின்றனர். இவர்களுக்கு வசதிகளை மேம்படுத்தவும், புனித நீராடும் வழித்தடம், கோயில் பிரகாரத்தில் மழை நீர் தேங்குவதை தடுக்க நிரந்தர திட்டம், தரிசனத்திற்கு வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சிரமப்படுவதை தவிர்க்க திட்டம் உள்ளது.
மேலும், அக்னி தீர்த்த கடலில் கழிவு நீர் கலப்பதை தடுத்தல், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள 2ம் பிரகாரம் கட்டுமானம் உள்ளிட்ட பல பணிகளை செய்வதற்கும், கோயிலில் புதிய உடை மாற்றும் அறை அமைப்பது உள்ளிட்ட பல பணிகளுக்கு மெகா திட்டம் தயாராக உள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிக்க உள்ளார்.
கோயிலுக்குள் தடுப்பு வேலிகளால் தட்சிணாமூர்த்தி சன்னதி, பிரகாரம் வலம் வர முடியாமல் பக்தர்கள் சிரமப்படுவது குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், கோயில் துணை ஆணையர் மாரியப்பன் உடன் இருந்தனர்.

தங்க தேர் வெள்ளோட்டம்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கத்தேர் புதுப்பிக்கப்பட்டு நேற்று மாலை பக்தர்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சேகர் பாபு 3ம் பிரகாரத்தில் தேரை இழுத்து துவக்கி வைத்தார்.
அவர் கூறுகையில், கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின் தங்கத்தேர் புதுப்பிக்கப்பட்டு பக்தர்ளுக்காக இன்று வெள்ளோட்டம் நடந்துள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் தங்கம், வெள்ளி காணாமல் போன விவகாரத்தில் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடக்கிறது. இதில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.